வாக்குப்பதிவின்போது தீவிர கண்காணிப்பில் இருக்க அலுவலர்களுக்கு வலியுறுத்தல்


வாக்குப்பதிவின்போது தீவிர கண்காணிப்பில் இருக்க அலுவலர்களுக்கு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Dec 2019 11:00 PM GMT (Updated: 23 Dec 2019 3:12 PM GMT)

வாக்குப்பதிவின்போது தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மண்டல அலுவலர்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அரியலூர்,

அரியலூரில், மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 158 மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி தேர்தல் பார்வையாளர் ராஜசேகர் தலைமையில் நடந்தது. அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா முன்னிலை வகித்தார். அப்போது தேர்தல் பார்வையாளர் ராஜசேகர், கலெக்டர் ரத்னா ஆகியோர் பேசுகையில், மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை சரியான முறையில் கணக்கிட்டு எடுத்து செல்ல வேண்டும். வாக்களிக்கப்பட்ட பிறகு வாக்குப்பெட்டிகளை முறையாக வரிசைப்படுத்தி தக்க பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். மண்டல அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மண்டலங்களில் வாக்குப்பதிவினை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்

வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிகளிலுள்ள அலுவலர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், மேல் அதிகாரியிடம் தகவல் தெரிவித்து, அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் எந்தவிதமான சிரமமின்றி வாக்களித்து செல்ல அடிப்படையான வசதிகள், பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளதா? என கண்காணிக்க வேண்டும். மேலும், வாக்குப்பதிவின்போது எந்தவொரு அச்சுறுத்தல் இல்லாமல் பாதுகாப்பாக பொதுமக்கள் வாக்களித்து செல்ல வாக்குச்சவாடி அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு, குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) பாலாஜி, திட்ட இயக்குனர்கள் சுந்தர்ராஜன் (ஊரக வளர்ச்சி முகமை), ஜெயராமன் (மகளிர் திட்டம்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் (பொது) மற்றும் மண்டல அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story