வரைவு பட்டியல் வெளியீடு: குமரி மாவட்டத்தில் 14 லட்சத்து 91 ஆயிரம் வாக்காளர்கள் கலெக்டர் தகவல்


வரைவு பட்டியல் வெளியீடு: குமரி மாவட்டத்தில் 14 லட்சத்து 91 ஆயிரம் வாக்காளர்கள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 23 Dec 2019 11:00 PM GMT (Updated: 23 Dec 2019 4:50 PM GMT)

குமரி மாவட்டத்தில் 14 லட்சத்து 91 ஆயிரத்து 949 வாக்காளர்கள் இருப்பதாக வரைவு பட்டியலை வெளியிட்ட பிறகு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் நிலவரப்படி 14 லட்சத்து 93 ஆயிரத்து 509 பேர் இருந்தனர். இதைத் தொடர்ந்து புதிய வாக்காளர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட பணிகள் பல கட்டமாக நடந்தன. இந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சரண்யா அரி பெற்றுக்கொண்டார். முன்னதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே நிருபர்களிடம் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் ஏற்கனவே இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 26-3-2019 அன்று வெளியிடப்பட்டது. அப்போது ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 53 ஆயிரத்து 267 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 40 ஆயிரத்து 83 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 159 பேரும் என மொத்தம் 14 லட்சத்து 93 ஆயிரத்து 509 பேர் இருந்தனர்.

வாக்காளர் பட்டியல் திருத்தம்

இதைத் தொடர்ந்து 27-3-2019 முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகள் நடந்தன. அதாவது புதிய வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து இறந்த மற்றும் இடம்பெயர்ந்த நபர்களை கண்டறிந்து நீக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தன.

அதன்படி புதிதாக 6 ஆயிரத்து 93 ஆண்களும், 7 ஆயிரத்து 262 பெண்களும், 23 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 378 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அதே சமயத்தில் 7 ஆயிரத்து 935 ஆண்களும், 6 ஆயிரத்து 998 பெண்களும் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 938 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இறப்பு மற்றும் இடம் பெயர்ந்ததால் இவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டது.

1,560 வாக்காளர்கள் நீக்கம்

எனவே தற்போது வெளியிடப்பட்டு உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் 14 லட்சத்து 91 ஆயிரத்து 949 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 7 லட்சத்து 51 ஆயிரத்து 425 பேர் ஆண்கள் ஆவர். 7 லட்சத்து 40 ஆயிரத்து 347 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 177 பேர் இருக்கிறார்கள். வரைவு வாக்காளர் பட்டியலை வைத்து பார்க்கும் போது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்த வாக்காளர்களை காட்டிலும் 1560 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருப்பதால் வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் இடம்பெற்று உள்ளதா? என்று சரிபார்த்து கொள்ளவேண்டும்.

சிறப்பு முகாம்

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் சிறப்பு முகாம் அடுத்த மாதம் 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த முகாம்களை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 1-1-2020 அன்றுடன் 18 வயது பூர்த்தி அடைந்த மற்றும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறாதவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

மேலும் வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளையும் திருத்தம் செய்து கொள்ளலாம். சிறப்பு முகாம்கள் அல்லாத நாட்களில் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் வருவாய் அதிகாரி ரேவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ெபாது) சுகன்யா, நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகி ெஜயகோபால், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், பா.ஜனதா நகர தலைவர் நாகராஜன் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story