மார்த்தாண்டத்தில் பிரபல கொள்ளையன் கைது 6½ பவுன் நகை, 13 லேப்-டாப்கள் மீட்பு


மார்த்தாண்டத்தில் பிரபல கொள்ளையன் கைது 6½ பவுன் நகை, 13 லேப்-டாப்கள் மீட்பு
x
தினத்தந்தி 25 Dec 2019 4:15 AM IST (Updated: 25 Dec 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 6½ பவுன் நகை, 13 லேப்-டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குழித்துறை,

மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. வணிக வளாகத்தில் 3-வது மாடியில் மாராயபுரத்தை சேர்ந்த சுனில்குமார் என்பவர் லேப்-டாப் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 3-ந் தேதி இரவு மர்மநபர் அந்த கடை பூட்டை உடைத்து அங்கிருந்த 7 புதிய லேப்டாப்கள், பழுது பார்க்க வைத்திருந்த 3 லேப்டாப்கள் மற்றும் ரூ.85 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டார்.

இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் கொள்ளை தொடர்பாக துப்பு துலக்க சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

வாலிபர் பிடிபட்டார்

இந்தநிலையில் கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குழித்துறை ரெயில்நிலையத்தில் வைத்து மார்த்தாண்டம் கொடுங்குளத்தை சேர்ந்த நவ்சாத் மகன் ரெசிம் (வயது 25) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

இதில் ரெசிம், மார்த்தாண்டம் கடையில் கொள்ளையடித்ததை ஒப்பு கொண்டார். பின்னர் ரெசிமிடம் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் ரெசிமிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். வேறு ஏதேனும் வழக்குகளில் தொடர்பு இருக்கிறதா? என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டது.

நகை, பணம் மீட்பு

அப்போது பிடிபட்ட ரெசிம், பிரபல கொள்ளையன் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. கேரளாவை சேர்ந்த வில்சன் என்பவருடன் சேர்ந்து ரெசிம் பல இடங்களில் கைவரிசையில் ஈடுபட்டுள்ளார். அதே சமயத்தில், சில திருட்டில் தனியாகவும் வேட்டை நடத்தியுள்ளார்.

அந்த வகையில் மார்த்தாண்டம், கருங்கல், களியக்காவிளை பகுதிகளில் 7 இடங்களில் ரெசிம் கொள்ளையடித்துள்ளான். இதனையடுத்து சி.எஸ்.ஐ. வணிக வளாக கடையில் திருடிய 7 லேப்-டாப்கள், மார்த்தாண்டம் எல்.எம்.எஸ். தனியார் மேல்நிலைப்பள்ளியில் இருந்து திருடிய 6 லேப்டாப்கள் மற்றும் பயணம் கடையில் இருந்து திருடிய ரூ.60 ஆயிரம், கருங்கல் நிதி நிறுவனத்தில் திருடிய 6½ பவுன் நகைகளை ரெசிமிடம் இருந்து போலீசார் மீட்டனர்.

கைது

பிரபல கொள்ளையன் ரெசிம், போலீசிடம் சிக்கியதற்கு முக்கிய துருப்பு சீட்டாக கண்காணிப்பு கேமரா தான் இருந்துள்ளது. அதில், ஒரு கடையில் திருடிய போது ரெசிமின் உருவம் தெள்ள தெளிவாக பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் ரெசிமை கைது செய்தனர். மார்த்தாண்டம் பகுதியை கலக்கிய பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Next Story