2-ம் கட்ட தேர்தல்: தேனி உள்பட 6 ஒன்றியங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு - மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்
உள்ளாட்சி தேர்தலில் தேனி உள்பட 6 ஒன்றியங்களில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.
தேனி,
தேனி மாவட்டத்தில் மொத்தம் 8 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அதில், ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை ஒன்றியங்களுக்கு முதற்கட்டமாக கடந்த 27-ந்தேதி தேர்தல் நடந்தது. 2-வது கட்டமாக தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது.
இந்த 6 ஒன்றியங்களில் 7 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 65 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 82 ஊராட்சி மன்ற தலைவர்கள், 744 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 898 பேரை தேர்வு செய்ய நேரடி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. இதில், 7 ஊராட்சி மன்ற தலைவர்கள், 152 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 159 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து 739 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 2,176 பேர் போட்டியிடுகின்றனர்.
2-ம் கட்ட தேர்தலுக்கு மொத்தம் 585 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. சுமார் 5 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. 6 ஒன்றியங்களிலும் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. உப்புக்கோட்டை, சுக்குவாடன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
தேனி ஒன்றியம் அரண்மனைப்புதூரில் ஆண்களுக்கு என்று தனியாக ஒரு வாக்குச்சாவடியும், பெண்களுக்கு என்று தனியாக ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு ஆண்கள், பெண்கள் தனித்தனியாக சென்று வாக்களித்தனர்.
மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வடபுதுப்பட்டி முத்தாலம்மன் இந்து தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். இதற்காக காலை 7 மணிக்கே கலெக்டர் வாக்குச்சாவடிக்கு வந்து விட்டார்.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி 6 ஒன்றியங்களிலும் வாக்குப்பதிவு 50 சதவீதத்தை தாண்டியது. தொடர்ந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.
வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், 300 ஊர்க்காவல் படையினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆசியா மரியம், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story