நச்சுத்தொட்டி கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டக்கூடாது நகராட்சி ஆணையர் பேச்சு


நச்சுத்தொட்டி கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டக்கூடாது நகராட்சி ஆணையர் பேச்சு
x
தினத்தந்தி 4 Jan 2020 11:00 PM GMT (Updated: 2020-01-04T20:11:33+05:30)

நச்சுத்தொட்டி கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டக்கூடாது என்று ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில், மனிதக்கழிவுகளை மனிதனே அகற்ற தடை சட்டம்-2013 குறித்து அனைத்து கழிவுநீர் வாகன டிரைவர், உரிமையாளர், பணியாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) அறச்செல்வி தலைமை தாங்கி பேசியதாவது:-

அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் நகராட்சியில் முறையாக பதிவு செய்ய வேண்டும். அதனை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க வேண்டும். கழிவுநீர் வாகன டிரைவர், உரிமையாளர், பணியாளர்கள் அனைவருக்கும் தனிநபர் விபத்து காப்பீடு செய்யப்பட வேண்டும். எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும், முறையாக நகராட்சியில் தகவல் தெரிவிக்காமல் நகரில் உள்ள எந்த கழிவறைகளையோ? சாக்கடைகளையோ? சுத்தம் செய்யக்கூடாது. கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியினை காலை 6 மணி முதல் மாலை 6 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்.

சிறை தண்டனை

சுத்தம் செய்யப்பட்ட நச்சுத்தொட்டியின் கழிவுகளை ஆறுகள், ஓடை போன்ற நீர்நிலைகளில் கொட்டக்கூடாது. அனைத்து தனியார் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் எக்காரணம் கொண்டும் நகராட்சி பணியாளர்களை கொண்டு தங்கள் பணியை செய்யக்கூடாது. தனியார் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் தங்கள் பணி செய்யும் முகவரியினை நகராட்சியில் தெரிவித்த பின்னரே பணி செய்ய வேண்டும்.

மனித கழிவுகளை அகற்ற மனிதனை ஈடுபடுத்தக் கூடாது. மீறினால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு முதல் 3 மாதம் வரை எந்த நீதிமன்றத்திலும் முன்ஜாமீன் கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story