கூடலூர் பகுதியில் செண்டு பூக்கள் விளைச்சல் அமோகம்
கூடலூர் பகுதியில் செண்டு பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது.
கூடலூர்,
கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் செண்டு பூக்களை சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் பூக்களை கம்பம், மதுரை, சீலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இந்த ஆண்டு கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஆங்கூர்பாளையம், குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செண்டு பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது.
கடந்த கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர். அப்போது சிறப்பு பூஜை வழிபாடுகளுக்காக செண்டு பூக்களின் தேவை அதிகரித்து இருந்தது. இதனால் செண்டு பூக்களின் விலையும் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது தேவை குறைந்து வருவதாலும், பனிப்பொழிவின் காரணமாகவும் செண்டு பூக்களின் விலை குறைய தொடங்கி உள்ளது. நேற்று ஒரு கிலோ ரூ.15-ல் இருந்து ரூ.20 வரை செண்டு பூக்கள் விற்பனையானது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, சபரிமலை சீசன் என்பதால் செண்டு பூக்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விசேஷ நாட்கள் எதுவும் இல்லாததால் அவற்றின் விலை குறைந்துள்ளது. இருப்பினும் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்றனர்.
Related Tags :
Next Story