குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்


குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 Jan 2020 11:00 PM GMT (Updated: 5 Jan 2020 4:16 PM GMT)

கரூர் மாவட்டத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகத்தை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கரூர்,

தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர் களுக்கு கூட்டுறவுத்துறை பொதுவிநியோகத்திட்டத்தின் மூலம் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பினையும், வருவாய்த்துறையின் மூலம் விலையில்லா வேட்டி, சேலைகளையும் கரூர் வெங்கமேடு வ.உ.சி. தெருவில் முதற்கட்டமாக 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நம் இந்திய நாடானது மதம், மொழி, இனம் போன்றவற்றில் பல்வேறு வேறுபாட்டினை கொண்டிருந்தாலும், இந்தியன் என்பதில் ஒற்றுமையோடு இருக்கிறோம். இதில் நாட்டின் தென்கோடியில் உள்ள மாநிலமான தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சிறப்பிடம் பெறுகின்றனர்.

தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடனேயே பசி என்ற வார்த்தையே நமது மாநிலத்தில் இருக்கக்கூடாது என்கிற நோக்கில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 20 கிலோ அரிசியை விலையில்லாமல் வழங்குவதற்கான ஆணையில் முதல் கையெழுத்திட்டவர் ஜெயலலிதா ஆவார். ஆனால் மத்திய அரசு இப்போதுதான் உணவு பாதுகாப்புச்சட்டத்தை கொண்டுவந்து ஒருவருக்கு மாதம் 5 கிலோ உணவுப்பொருள் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளார்கள்.

எதிர்கட்சியினர் கோர்ட்டினை நாடி...

தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் திருநாளான பொங்கல் திருநாளை அனைவரும் சீரோடும் சிறப்போடும் கொண்டாட வேண்டும் என்கிற நோக்கில், பொங்கல் பரிசாக ஒரு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், இரண்டு அடி நீள கரும்புத்துண்டு, வேட்டி, சேலை ஆகிய பொருட்களுடன் ரொக்கமாக ரூ.100 வழங்கினார் ஜெயலலிதா. தற்போது அவரது வழியில் செயல்படும் அரசானது, பாகுபாடின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் சிறப்புப்பரிசு தொகுப்புடன் ரொக்கமாக ரூ.1,000 வழங்குகிறது. இதனை பொறுத்து கொள்ள முடியாமல், எதிர்கட்சியினர் சிலர் கோர்ட்டினை நாடி தடுக்க பார்த்தனர். எனினும் தற்போது தேர்தல் முடிவடைந்ததால் பொங்கல் பரிசுதொகுப்பினை வழங்கி வருகிறோம். சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் அரிசி அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ரூ.29¼ கோடி நிதி ஒதுக்கீடு

அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் 12,143 குடும்ப அட்டைகள் சர்க்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டையாக மாற்றப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பிற்காக ரூ.29 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 95 ஆயிரத்து 415 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுதொகுப்பு வருகிற 9-ந்தேதி முதல் அனைத்து நியாயவிலைக் கடைக்களிலும் வழங்கப்படவுள்ளது. முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாமின் கீழ் பெறப்படட மனுக் களின் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் 8,000 பேருக்கு முதியோர்,விதவை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் தகுதியான நபர்கள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் தனலட்சுமி, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைத் தலைவர் நெடுஞ் செழியன், தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் சிவசாமி, கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் வி.சி.கே.ஜெயராஜ், நகர செயலாளர் வெங்கமேடு பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story