பருத்தி விளைச்சல் அமோகமாக இருந்தாலும் விலை இல்லை - விவசாயிகள் வேதனை


பருத்தி விளைச்சல் அமோகமாக இருந்தாலும் விலை இல்லை - விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 5 Jan 2020 10:00 PM GMT (Updated: 5 Jan 2020 9:56 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் பருத்தி விளைச்சல் அமோகமாக இருந்தாலும் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துவரும் நிலையில் மத்திய-மாநில அரசுகள் பருத்தியை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்த தொடர் மழையால் 700-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் பயிர் சாகுபடியை ஆர்வத்துடன் தொடங்கினர். கிணற்று பாசனம் மூலம் வணிக பயிர்களை சாகுபடி செய்யும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

கடந்த 2018-ம் ஆண்டு மாவட்டம் முழுவதும் 60 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் படைப்புழு தாக்குதலால் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதனால் கடந்த ஆண்டு மக்காச்சோளத்துக்கு பதிலாக பருத்தியை சாகுபடி செய்தனர். 30 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு உள்ள நிலையில் பூச்சி தாக்குதல் எதுவும் இல்லாததால் பருத்தி அமோக விளைச்சல் ஆகி உள்ளது.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புகிலோ ரூ.60 வரை கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி தற்போது கிலோ ரூ.30-க்கு மட்டுமே வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் மிகுந்த வேதனை அடைந்து உள்ளனர்.

இதுதொடர்பாக உள்நாட்டு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் விஜயமுருகன், கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில், மத்திய,மாநில அரசுகள் காட்டன் கார்பரேஷன் மூலமும் மாவட்ட விற்பனை குழு மூலமும் பருத்தியை நியாயமான விலைக்கு கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Next Story