ஜோலார்பேட்டையில் ரெயில்வே ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


ஜோலார்பேட்டையில் ரெயில்வே ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Jan 2020 10:30 PM GMT (Updated: 6 Jan 2020 12:50 PM GMT)

ஜோலார்பேட்டையில் ரெயில்வே ஊழியர் வீட்டில் நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை, 

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் ஜித்தன் (வயது 30), ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் எலக்ட்ரிக்கல் கம்யூனிகே‌ஷன் பிரிவில் ரெயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஜோலார்பேட்டையை அடுத்த தென்றல்நகர் பண்ணாரிஅம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்று இருப்பதால், ஜித்தன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு, ஜித்தன் வேலைக்கு சென்றார். வேலையை முடித்துவிட்டு, நேற்று காலை வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜித்தன் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

மேலும் ஜித்தன் வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டின் கதவையும் கொள்ளையர்கள் உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அந்த வீட்டில் யாரும் குடியேறவில்லை என்பதால், கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து ஜித்தன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Next Story