கறம்பக்குடி ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் மோதல்; போலீஸ் தடியடி அ.தி.மு.க.வினர் சாலை மறியல்


கறம்பக்குடி ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் மோதல்; போலீஸ் தடியடி அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 Jan 2020 4:30 AM IST (Updated: 12 Jan 2020 12:06 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் போலீசாருடன் அ.தி.மு.க.வினர் மோதலில் ஈடுபட்டனர். இதனால் தடியடி நடத்தப்பட்டது. அ.தி.மு.க.வினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றிய குழுவில் 16 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 7 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. அ.ம.மு.க. வேட்பாளர் 1 வார்டையும், சுயேச்சைகள் 2 வார்டுகளையும் கைப்பற்றினர். இந்நிலையில் ஒன்றியக்குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்காக ஒன்றிய அலுவலக வளாகம் முழுவதும் மறைக்கப்பட்டு, தகரங்களால் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது.

நேற்று காலை 10 மணிக்கு முதலில் அ.தி.மு.க.வை சேர்ந்த 6 பேர் மற்றும் 1 சுயேச்சை உறுப்பினர்கள் உள்ளே சென்றனர். பின்னர் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மற்றும் அ.ம.மு.க., சுயேச்சை உறுப்பினர் ஒன்றிய அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது அ.தி.மு.க.வினர், தி.மு.க.வினரை நுழைய விடாமல் தடுத்தனர். தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்று இருந்தால் மட்டுமே தி.மு.க.வினரை அனுமதிக்க வேண்டும் என கூறி தேர்தல் அதிகாரி மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

மேலும் அ.தி.மு.க.வினர் போலீசாரின் தடுப்பை மீறி அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போலீசார் பாதுகாப்புடன் தி.மு.க. மற்றும் ஆதரவு கவுன்சிலர்கள் உள்ளே சென்றனர். இதன்பின் தி.மு.க.வினரை உள்ளே அனுமதித்ததை கண்டித்தும், தேர்தல் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அ.தி.மு.க.வினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஒன்றிய அலுவலக தடுப்பு தகரங்கள் மீதும் கற்களை வீசி தாக்கினர். சிலர் அலுவலக பின்புறம் வழியாக சுவர் ஏறி குதித்து உள்ளே வர முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தார். இந்த மறியல் போராட்டத்தால் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story