தேனி மலைக்கரட்டில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்
தேனியில் மலைக்கரட்டில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.
தேனி,
தேனி பாரஸ்ட்ரோடு பகுதியையொட்டி வனத்துறைக்கு சொந்தமான மலைக்கரடு அமைந்துள்ளது. இங்கு நாட்டுகருவேல மரங்களும், சீமைக்கருவேல மரங்களும் அதிக அளவில் வளர்ந்துள்ளன. குடியிருப்பு பகுதியையொட்டி கரட்டுப்பகுதி அமைந்துள்ளதால் இப்பகுதி குப்பைத் தொட்டியாக மாறி வருகிறது.
இங்கு கொட்டப்படும் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படாததால், பிளாஸ்டிக் குப்பைகள் காற்றில் பரவி வனப்பகுதியில் குவிந்து வருகிறது. தற்போது பாரஸ்ட்ரோடு 5-வது தெரு, 6-வது தெரு, 7-வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த மலைக்கரட்டு பகுதியில் அரிய வகை பாம்புகள், கீரி, மயில் போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. பிளாஸ்டிக்கை இரையாக தின்று இவை அழியும் அபாயம் உள்ளது.
இந்த கரட்டுப்பகுதியை அடர்ந்த வனமாக மாற்றுவதற்கு வனத்துறை பெரிய அளவில் முயற்சிகள் எடுக்காத நிலையிலும், தன்னார்வலர்கள் அவ்வப்போது விதைப்பந்துகள் தூவும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இங்கு பிளாஸ்டிக் குப்பைகள் பரவி வருவதால் மண் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே இங்கு குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். மேற்கொண்டு குப்பைகள் பரவாமல் தடுக்க குடியிருப்பு பகுதிகளில் இருந்து குப்பைகளை அன்றாடம் அப்புறப்படுத்த வேண்டும். கரட்டுப் பகுதியில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நகராட்சி மற்றும் வனத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதும் இயற்கை வள ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story