சட்ட மன்ற தேர்தல் தான் ‘கிளைமாக்ஸ்’ தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் மு.க.ஸ்டாலின் பேச்சு


சட்ட மன்ற தேர்தல் தான் ‘கிளைமாக்ஸ்’ தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 21 Jan 2020 4:45 AM IST (Updated: 21 Jan 2020 1:13 AM IST)
t-max-icont-min-icon

வருகிற சட்ட மன்ற தேர்தல் தான் ‘கிளைமாக்ஸ்’. விரைவில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழுப்புரம்,

விழுப்புரத்தில் திருச்சி நெடுஞ்சாலையில் கலைஞர் அறிவாலயத்தின் வளாகத்தில் ரூ.15 லட்சம் செலவில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். பின்னர் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

திருவாரூர் கருணாநிதியை கலைஞர் கருணாநிதி என்று மாற்றிய ஊர் இந்த விழுப்புரம்தான். சாமானியர்களுக்காக ஆட்சி நடத்தியவர் அவர். தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் சாமானியர்களுக்காக எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். இவரை போன்று இனி எந்த தலைவராலும் செய்ய முடியாது, செய்யப்போவதும் இல்லை, அவ்வாறு செய்வதற்கு இனி யாரும் பிறக்கப்போவதும் கிடையாது.

எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியால் இதுபோன்று ஒரு சாதனை பட்டியலை கொடுக்க முடியுமா? அவர்களால் வேதனை பட்டியலைத்தான் தர முடியும். சட்டம்- ஒழுங்கை பற்றி கேட்டால் அதிலும் நாங்கள்தான் முதல் இடம் என்கிறார்கள். இதை சொல்வதற்கு உங்களுக்கு கூச்சமாக இல்லையா? பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். போலீஸ் உயிருக்கே பாதுகாப்பு இல்லை, இதைவிட ஒரு சாட்சி தேவையா?

ஜெயலலிதா மரணம்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் 3 குற்றச்சாட்டுகளை தொடர்ந்து எடுத்துரைத்தேன். ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மம் வெளிக்கொண்டு வரப்படும் என்றோம். அதற்கான நீதி விசாரணை கமி‌‌ஷன் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டது. அது செயல்படுகிறதா? இல்லையா? ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதை நாங்கள் கண்டுபிடித்து சொல்லவில்லை. இப்போது துணை முதல்-அமைச்சராக இருக்கிற ஓ.பன்னீர்செல்வம்தான் அதை கண்டுபிடித்து சொன்னவர். அவர் ஆவியுடன் பேசினாரா? இல்லையா? விசாரணை ஆணையம் அமைத்த பிறகு அந்த ஆணையம் ஓ.பன்னீர்செல்வத்தை விசாரணைக்கு ஆஜராகும்படி 6 முறை அழைப்பு விடுத்தும் ஏன் அவர் செல்லவில்லை. ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை இன்றைக்கு ஓ.பன்னீர்செல்வம் காப்பாற்றி கொண்டிருக்கிறாரா? இல்லையா? தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா மரணம் குறித்த உண்மையை வெளிக்கொண்டு வருவது தான் எங்களது முதல் வேலை.

தண்டவாளத்தில் ஏற்றுவோம்

கோடநாடு சம்பவத்தில் கூலிப்படையினர் உண்மையை சொன்ன காரணத்தினால் அவர்களை மீண்டும், மீண்டும் கைது செய்து மிரட்டி கொண்டிருக்கிறார்கள். அந்த சம்பவத்தில் சாட்சியாக சேர்க்கப்பட்ட காவலாளி கிரு‌‌ஷ்ணதாவா தலைமறைவாக இருக்கிறாரா? அல்லது தலைமறைவாக்கப்பட்டு இருக்கிறாரா? இந்த சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே? இந்த வழக்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்று மக்கள் யோசிக்க வேண்டும். இதற்கு அ.தி.மு.க. அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது உங்களது வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றுவோம். இதை மறந்து விடாதீர்கள்.

நாடகம்

ஈழத்தமிழர்களுக்கும், சிறுபான்மையின மக்களுக்கும் துரோகம் விளைவிக்கிற குடியுரிமை திருத்த சட்டத்தை அ.தி.மு.க.வினர் ஆதரிக்கிறார்கள். இதுபற்றி சட்டமன்றத்தில் நாங்கள் பேசினோம். அதற்கு தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது, எங்கும் கலவரம் இல்லை என்கிறார். தமிழக மக்கள் அமைதியான முறையில் போராடுகிறார்கள். ஆனால் இந்தியா முழுவதும் கொழுந்துவிட்டு எரிகிறது. தடியடி, துப்பாக்கி சூடு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து போராட்டம் வலுக்கிறது. இப்படியிருக்க எடப்பாடி ஏதோ சட்டமேதை போன்று பேசி வருகிறார். கா‌‌ஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை போராடுகிறவர்கள் முட்டாள்களா? இரட்டை துரோகம் விளைவிக்கிற இந்த சட்டத்தை ஆதரித்துவிட்டு இன்றைக்கு இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முயற்சி செய்து வருகிறோம் என்று நாடகம் நடத்துகிறார்கள். உங்களது நாடகம் செல்லுபடியாகாது என்பதற்கு உதாரணம் உள்ளாட்சி தேர்தல் வெற்றி. இதுபற்றி அவர்களிடம் கேட்டால் நாங்கள் வளர்பிறை, தி.மு.க. தேய்பிறை என்பார்கள்.

கிளைமாக்ஸ்

உள்ளாட்சி தேர்தல் இடைவேளை தான். சட்டமன்ற தேர்தல் தான் ‘கிளைமாக்ஸ்’. விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சியை பிடிக்கும். அதை தடுப்பதற்காக ஆளும்கட்சியினர் மட்டுமின்றி சில ஊடகங்களும் திட்டமிட்டு சதி செய்கிறார்கள். கருணாநிதி சந்திக்காத சதிகளா? தோல்வியை கண்டு துவண்டு மூலையில் முடங்குகிற இயக்கம் தி.மு.க. அல்ல. தலைவர் கருணாநிதி நமது உயிர், நமது உடல், நமது சக்தி. அது நம்மை இயக்கும், நாம் தமிழகத்தை இயக்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story