மயானத்தில் குப்பை தரம் பிரிக்கும் பணி: பொதுமக்கள் சாலை மறியல் கும்பகோணத்தில் பரபரப்பு


மயானத்தில் குப்பை தரம் பிரிக்கும் பணி: பொதுமக்கள் சாலை மறியல் கும்பகோணத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Jan 2020 4:15 AM IST (Updated: 24 Jan 2020 1:21 AM IST)
t-max-icont-min-icon

மயானத்தில் நடக்கும் குப்பை தரம் பிரிக்கும் பணியை நிறுத்தக்கோரி கும்பகோணத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெருமாண்டியில் உள்ள மயானம் காவிரி ஆற்றின் கரையோரத்தில் உள்ளது. பழமையான இந்த மயானத்தில் அடக்கம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. 1½ ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மயானத்தில் நகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கான கட்டிடம் கட்டும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடத்தால் மயானத்தில் உடல்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகிறார்கள்.

சாலை மறியல்

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில் மயானத்தில் மேற்கொள்ளப்படும் குப்பை தரம் பிரிக்கும் பணியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரமேஷ், பாலு ஆகியோர் தலைமையில் மயானம் அருகே உள்ள கல்லணை - பூம்புகார் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியல் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். மேலும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கலாம் என்றும் கூறினர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக அங்கு 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story