ராணிப்பேட்டையில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் திவ்யதர்‌ஷினி தேசிய கொடி ஏற்றினார்


ராணிப்பேட்டையில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் திவ்யதர்‌ஷினி தேசிய கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 26 Jan 2020 10:30 PM GMT (Updated: 26 Jan 2020 8:31 PM GMT)

ராணிப்பேட்டையில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் திவ்யதர்‌ஷினி தேசிய கொடியேற்றி வைத்து ரூ.5 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சிப்காட்(ராணிப்பேட்டை),

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த விழாவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்‌ஷினி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் புறாக்களை பறக்கவிட்டார்.

இதை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சிறப்பாக பணிபுரிந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 16 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்களுக்கு முதல்-அமைச்சரின் பதக்கங்களை வழங்கினார். ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உடனிருந்தார்.

பின்னர் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 18 சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 276 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 98 லட்சத்து 73 ஆயிரத்து 580 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள் 87 பேருக்கு கலெக்டர் திவ்யதர்‌ஷினி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் பிரிக்கப்பட்டு முதன் முதலில் நடைபெறும் குடியரசு தின விழா என்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Next Story