பஸ், ஆட்டோ கிணற்றுக்குள் பாய்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்


பஸ், ஆட்டோ கிணற்றுக்குள் பாய்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 30 Jan 2020 4:47 AM IST (Updated: 30 Jan 2020 4:52 AM IST)
t-max-icont-min-icon

பஸ், ஆட்டோ கிணற்றுக்குள் பாய்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

மும்பை,

துலே மாவட்டத்தில் இருந்து நாசிக் மாவட்டம் கல்வான் நோக்கி சென்று கொண்டிருந்த மாநில போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ் ஒன்று நேற்று முன்தினம் தியோலா அருகே எதிரே வந்த ஆட்டோவுடன் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் பஸ்சும், ஆட்டோவும் சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்தன. இந்த விபத்தில் சிக்கிய பஸ், ஆட்டோவில் இருந்து 20 பேர் பிணமாக மீட்கப் பட்டனர். மேலும் பலர் காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

பஸ், ஆட்டோ கிணற்றில் இருந்து கிரேன் உதவியுடன் வெளியே தூக்கப்பட்டதை தொடர்ந்து, கிணற்று தண்ணீரில் மூழ்கி கிடந்த சிலரின் உடல்களும் மீட்கப்பட்டன. மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சிலரும் உயிரிழந்தனர்.

இதனால் சாவு எண்ணிக்கை நேற்று 26 ஆக உயர்ந்தது. மேலும் காயத்துடன் 32 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்குள்ளான ஆட்டோவில் 9 பேர் பயணித்ததும், அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த துயர விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் செய்தி விடுத்துள்ளார். அதில், “மராட்டியத்தில் நடந்த விபத்து துரதிருஷ்ட வசமானது. எனது எண்ணங்கள் அனைத்தும் துயரத் துக்கு ஆளான குடும்பத் தினர் மீது தான் உள்ளது. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.


Next Story