குடியாத்தம் அருகே, போலி தங்க நாணயங்களை கொடுத்து தொழிலதிபரிடம் ரூ.25 லட்சம் மோசடி - போலீசார் விசாரணை


குடியாத்தம் அருகே, போலி தங்க நாணயங்களை கொடுத்து தொழிலதிபரிடம் ரூ.25 லட்சம் மோசடி - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 31 Jan 2020 10:30 PM GMT (Updated: 31 Jan 2020 5:55 PM GMT)

குடியாத்தம் அருகே போலி தங்க நாணயங்களை கொடுத்து தொழிலதிபரிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குடியாத்தம், 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் மாதையன் (வயது 50). இவருக்கு சொந்தமாக விடுதி (லாட்ஜ்), காம்ப்ளக்ஸ் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளது. இவரது விடுதிக்கு சேலத்தை சேர்ந்த மரவியாபாரி ஒருவர் அடிக்கடி வந்து தங்கி சென்றுள்ளார். அப்போது அவருக்கு மாதையனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதிக்கு வந்த மரவியாபாரியிடம் தனது மகனுக்கு திருமணம் செய்ய உள்ளதாகவும், அதற்காக குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நகைகள் வாங்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு வியாபாரி எனக்கு சென்னையை சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் பழக்கம், அவர் மூலம் குறைந்த விலையில் நகைகளை வாங்கலாம் என கூறியுள்ளார்.

இதனையடுத்து மாதையனிடம் சென்னையை சேர்ந்த நகை வியாபாரி போனில் பேசியுள்ளார். அப்போது குடியாத்தம் அருகே உள்ளி கூட்ரோடு பகுதிக்கு பணத்துடன் வந்து நகையை பெற்று கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து நேற்றுமுன்தினம் மாலை மாதையன் தன்னுடன் 3 பேரை அழைத்து கொண்டு காரில் உள்ளி கூட்ரோடு பகுதிக்கு வந்துள்ளார்.

அப்போது அங்கு 3 பேர் இருந்தனர். அவர்கள் மாதையனிடம் சென்னையில் இருந்து நகை கொண்டு வந்துள்ளதாக அறிமுகப்படுத்தி கொண்டு, அருகில் உள்ள நிலத்திற்கு சென்றனர். அப்போது நகைகள் இல்லை எனவும், அதற்கு பதிலாக 2½ கிலோ தங்க நாணயங்கள் கொண்டு வந்திருப்பதாகவும் கூறி, அதனை காட்டி உள்ளனர். இதனையடுத்து மாதையன் அவர்களிடம் ரூ.25 லட்சத்தை கொடுத்துவிட்டு, நகை பையை வாங்கி உள்ளார். பணத்தை பெற்று கொண்ட 2 பேர் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றுவிட்டனர். மற்றொருவர் மாதையனின் கார் வரை வந்துவிட்டு, அங்கு வந்த காரில் ஏறி உடனடியாக சென்றுவிட்டார்.

இதனால் சந்தேகம் அடைந்த மாதையன் உடனடியாக நகை பையில் உள்ள தங்க நாணயங்களை சோதனை செய்ய ஆம்பூர் கொண்டு சென்றார். சோதனையில் அது போலியான நாணயங்கள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து மாதையன் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்க சென்றார். அப்போது போலீசார் சம்பவம் நடைபெற்ற பகுதி குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைப்பகுதி என கூறியுள்ளனர். இதனையடுத்து மாதையன் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாதையனிடம் செல்போனில் பேசியவர்கள் விவரங்கள் சேகரிப்பட்டும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் கிடைத்த செல்போன் சிக்னல் பதிவு கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story