‘கொரோனா’ பாதிப்பு எதிரொலி: ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை அளிக்க தனி வார்டு
‘கொரோனா‘ வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை அளிக்க தனி வார்டு திறந்து, அங்கு மூன்றடுக்கு நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
நாகர்கோவில்,
சீனாவில் உருவான ‘கொரோனா‘ வைரஸ் தாக்குதலால் அந்நாட்டை சேர்ந்த 170-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்த வைரஸ் தாக்குதல் அங்கு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் இருந்து இந்த வைரஸ் தாக்குதல் பல நாடுகளுக்கும் பரவி வருகிறது.
சீனாவில் வசிக்கும் இந்தியர்கள் சிலருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. கேரள மாநிலத்தில் ஒரு நர்ஸ் மற்றும் ஒரு மாணவி கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே சீனாவில் இருந்து இந்தியா திரும்புபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் சீனாவில் தங்கி படிக்கும் கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் எதிரொலியாக ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் 4 படுக்கைகள் உள்ளன. மேலும் சிகிச்சை அளிப்பதற்கான ஆக்சிஜன், வென்டிலேட்டர் மற்றும் மருந்து, மாத்திரைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற வருபவர்களுக்கு என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்? என்னென்ன சிகிச்சை அளிக்க வேண்டும்? அவ்வாறு சிகிச்சை அளிக்கும்போது பிற நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த வைரஸ் பரவாமல் இருக்க என்னென்ன தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? என்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமை தாங்கினார். மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ், பொதுமருந்தியல் துறை தலைவர் பயஸ் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் டீன் சுகந்தி ராஜகுமாரி கூறியதாவது:-
சீனாவில் இருந்து வந்தவர்களோ, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களோ கொரோனா வைரஸ் அறிகுறிகளோடு சிகிச்சை பெற ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தால் உடனடியாக அனுமதித்து தேவையான சிகிச்சை அளிக்க வசதியாக 4 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் வரும்பட்சத்தில் மேலும் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்படும். இந்த வார்டில் வென்டிலேட்டர், தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள், மருத்துவர்கள், நர்சுகள், நோயாளிகளுக்கான கவச உடைகள், முக கவசங்கள் போன்றவை தேவையான அளவில் உள்ளது. அதற்கு மேல் தேவைப்பட்டாலும் உடனடியாக வாங்கி இருப்பு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நமது மாவட்டப் பகுதிகளில் யாருக்காவது கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தால் பொதுமக்கள் எங்களது மருத்துவக்குழுவை தொடர்பு கொள்ளலாம். இதற்கு வசதியாக புதிதாக ஒரு செல்போன் எண் வாங்கப்பட்டுள்ளது. அதாவது 87780 21440 என்ற எண்ணை எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க மூன்றடுக்கு சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் கொண்ட குழு எனது தலைமையில் அமைக்கப் பட்டுள்ளது.
இந்த குழுவில் பொதுமருந்தியல் துறை, மயக்கவியல் துறை, நெஞ்சக நோய்த்துறை, நுண்ணுயிரியல் துறை, குழந்தைகள் மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தலைவர்கள், உதவி பேராசிரியர்கள், டாக்டர்கள், நர்சுகள், ஆய்வக நிபுணர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். கொரோனா வைரசை பொறுத்தவரையில் குழந்தைகள், முதியோர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு விரைவாக பரவ வாய்ப்பு உள்ளது. இதுவரை இந்த நோய் அறிகுறிகள் நமது மாவட்டத்தில் யாருக்கும் இல்லை. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.
இருப்பினும் மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளபடி ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு 10-க்கு மேற்பட்ட முறைகள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். இருமல் மற்றும் தும்மல் ஏற்படும்போது கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் 5 வயதுக்குகீழ் உள்ள குழந்தைகள், முதியோர்கள் மற்றும் நோயாளிகளை வெளியிடங்களுக்கு அழைத்துச்செல்வதை தவிர்க்க வேண்டும். நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கோ, அல்லது அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கோ சென்று பரிசோதனை செய்துகொண்டு, சிகிச்சை பெற வேண்டும். இதுபோன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள், பேனர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் குறித்த பயிற்சி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள், ஆய்வக பணியாளர்களுக்கு இன்று (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
எனவே நமது அரசு மருத்துவக்கல்லூரியைப் பொறுத்தவரையில் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும், சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு டீன் சுகந்தி ராஜகுமாரி கூறினார்.
மேலும் அவர் சிறப்பு வார்டில் உள்ள மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், பாதுகாப்பு உடைகள், முக கவசங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
Related Tags :
Next Story