மங்களூருவில் நெகிழ்ச்சி சம்பவம்: கிணற்றுக்குள் தவறி விழுந்த நாயை பத்திரமாக மீட்ட பெண்


மங்களூருவில் நெகிழ்ச்சி சம்பவம்: கிணற்றுக்குள் தவறி விழுந்த நாயை பத்திரமாக மீட்ட பெண்
x
தினத்தந்தி 1 Feb 2020 10:00 PM GMT (Updated: 1 Feb 2020 4:39 PM GMT)

மங்களூருவில் கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்த நாயை, பெண் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார். இந்த நெகிழ்ச்சி சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-

மங்களூரு, 

மங்களூரு நகர் எம்.ஜி.ரோடு அருகே பல்லால் பாக் பிருவர் குட்லா மைதானத்தின் அருகே தரைமட்ட கிணறு ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கிணற்றின் அருகே தெருநாய் ஒன்று உணவு தேடி வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நாய், தரைமட்ட கிணற்றுக்குள் தவறி விழுந்தது. அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த நாய், தண்ணீரில் மூழ்கி தத்தளித்தது. இந்த நிலையில் அந்தப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், நாய் குரைக்கும் சத்தம் கேட்டு கிணற்றின் அருகே வந்து பார்த்தார். அப்போது நாய், கிணற்று தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அந்தப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த இளைஞர்களிடம் அந்த பெண் தெரிவித்தார். இதனை கேட்ட அந்த இளைஞர்கள், அங்கு விரைந்து வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள், ஒரு கயிற்றை கட்டி கிணற்றுக்குள் விட்டனர். அந்த கயிற்றின் பிடியில் நாயை பாதுகாத்தனர். அந்த நாய், கயிறு மற்றும் கிணற்றின் துளையை பிடித்துக் கொண்டது. ஆனாலும் அந்த நாய் மிகவும் சோர்வாக இருந்தது.

சுமார் 2 மணி நேரமாக அந்த நாய் கிணற்றுக்குள் தத்தளித்து கொண்டிருந்தது. அந்த இளைஞர்கள் நாயை பார்த்து பரிதாப பட்டார்களே தவிர, அவர்கள் யாரும் கிணற்றுக்குள் இறங்கி நாயை காப்பாற்ற முன்வரவில்லை. இந்த நிலையில், விலங்குகளை நேசிக்கும் பெண்ணான ரஜினிக்கு இதுகுறித்து அந்த இளைஞர்கள் தகவல் கொடுத்தனர். மும்பையை சேர்ந்த ரஜினி, திருமணமாகி கணவருடன் மங்களூருவில் வசித்து வருகிறார். இதுபற்றி அறிந்ததும் ரஜினி அங்கு விரைந்து வந்தார். கிணற்றுக்குள் தண்ணீரில் நாய் தத்தளிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், நாயை மீட்கும் முயற்சியில் இறங்கினார்.

அதாவது தனது உடலில் கயிற்றை கட்டி எந்தவித பயமும் இன்றி தைரியமாக கிணற்றுக்குள் இறங்கினார். அவருக்கு அந்த இளைஞர்கள் உதவி செய்தனர். கிணற்றுக்குள் 15 அடி ஆழத்தில் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த நாயை, ரஜினி ்மீட்க முயன்றார். ஆனால் அந்த நாய், அவரை பார்த்து குரைத்ததுடன், அவரை கடிக்கவும் முயன்றது. ஆனாலும் ரஜினி, கிணற்றில் தத்தளித்த நாயை லாவகமாக பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தார். அவர் ஒற்றை கையால் கயிற்றை பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் நாயின் தலையை பிடித்து மேலே தூக்கி வந்தது, அங்கிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

பின்னர் அவர், நாயை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார். ரஜினி, கிணற்றுக்குள் இறங்கி நாயை மீட்கும் சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இளைஞர்களே இறங்க பயந்த கிணற்றுக்குள் இறங்கி நாயை மீட்ட ரஜினியின் மனதைரியம் மற்றும் மனிதாபிமானத்தை அந்தப்பகுதி மக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டினார்கள்.

Next Story