வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்: ஏ.டி.எம். மையங்கள் முற்றிலும் முடங்கின


வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்: ஏ.டி.எம். மையங்கள் முற்றிலும் முடங்கின
x
தினத்தந்தி 2 Feb 2020 3:45 AM IST (Updated: 2 Feb 2020 3:29 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் 2-வது நாளாக தொடர்ந்த நிலையில் ஏ.டி.எம். மையங்கள் முற்றிலுமாக முடங்கியதால் அரசு ஊழியர்கள் ஓய்வூதியர்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்தனர்.

விருதுநகர், 

ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றும் 2-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்தது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்றும் 80 சதவீத வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்த நிலையில் மொத்தம் உள்ள 178 வங்கி கிளைகளில் 131 வங்கி கிளைகள் செயல்படவில்லை.

2 நாட்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தங்களது ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை ஏ.டி.எம். மையங்களில் எடுக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. ஏனெனில் ஏ.டி.எம். மையங்களில் பணம் இருப்பு இல்லாததால் அவை முற்றிலுமாக முடங்கின. அத்தியாவசியமாக பணம் எடுக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள் ஒவ்வொரு ஏ.டி.எம். மையமாக நகர் முழுவதும் அலைந்தும் பணம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டது.

பணப்பரிமாற்றத்திலும் 2-வது நாளாக பாதிப்பு ஏற்பட்டது. சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மாத தொடக்க நாளான நேற்று தங்களின் ஊழியர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முடியாமல் தவித்தனர். இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) வங்கிகள் விடுமுறை என்பதால், தொடர்ந்து 3 நாட்கள் வங்கிகள் செயல்படாத நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்பட்டது.

Next Story