ஊட்டி ஏரியில் விழுந்து கிடக்கும் மரங்களால் படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம்


ஊட்டி ஏரியில் விழுந்து கிடக்கும் மரங்களால் படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 3 Feb 2020 11:00 PM GMT (Updated: 3 Feb 2020 7:50 PM GMT)

ஊட்டிஏரியில் விழுந்து கிடக்கும் மரங்களால் படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான ஊட்டியில் படகு இல்லம் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1825-ம் ஆண்டு தாமஸ் மன்றோ என்பவர் மூலம் ஊட்டி ஏரியில் படகு சவாரி இயக்கப்பட்டது. அப்போது ஏரி தண்ணீரை மக்கள் குடிநீராகவும் பயன்படுத்தினர். கோடப்பமந்து கால்வாய் மூலம் வரும் தண்ணீர் ஏரியில் சேகரமாகிறது. இதற்கிடையே கால்வாயையொட்டி உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஏரியில் கலந்து வருகிறது. கழிவுநீரை சுத்திகரிக்க ஏரி கரையோரத்தில் கழிவுநீர்சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையத்தில் மோட்டார் மற்றும் எந்திரத்தில் பழுது ஏற்பட்டால், கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே ஏரியில் விடப்படுகிறது. இதனால் ஏரியில் எங்கு பார்த்தாலும் தண்ணீரின் நிறம் மாறி கழிவுநீராக காட்சி அளிக்கிறது.மேலும் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் மிதக்கின்றன. ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகு என மொத்தம் 130 படகுகள் உள்ளன.

விபத்தில் சிக்கும் அபாயம்

இந்த நிலையில் ஏரியில் மழையின் போது கீழே விழுந்த மரங்கள் ஆங்காங்கே அப்படியே கிடக்கிறது. பல மாதங்களை கடந்தும் வெட்டி அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. அதன் காரணமாக வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் சவாரி செய்யும் போது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மிதக்கும் மரக்கிளைகளில்மிதி படகு சிக்கும் நிலைகாணப்படுகிறது. இதனால் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

சமீபத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற மிதி படகு திடீரென ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாகபடகு இல்ல ஊழியர்கள் மீட்பு படகில் சென்று அவர்களை மீட்டு முதலுதவி அளித்தனர். அவர்கள் உயிர் பாதுகாப்பு கவசம் அணிந்து இருந்ததால் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

நடவடிக்கை

ஊட்டியை ரசித்து பார்க்கவரும் சுற்றுலா பயணிகள் விபத்தை விலை கொடுத்து வாங்கும் அவலநிலை உள்ளது. எனவே ஊட்டி ஏரியில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றுவதோடு, ஏரி மற்றும் படகுகளை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story