சீனாவில் இருந்து விழுப்புரம் வந்த மருத்துவக் கல்லூரி மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா?


சீனாவில் இருந்து விழுப்புரம் வந்த மருத்துவக் கல்லூரி மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா?
x
தினத்தந்தி 4 Feb 2020 4:30 AM IST (Updated: 4 Feb 2020 1:52 AM IST)
t-max-icont-min-icon

சீனாவில் இருந்து திரும்பிய விழுப்புரத்தை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்று அவரை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

விழுப்புரம்,

சீனாவில் தற்போது கொரோனா என்ற புதிய வகை வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்தியாவில் கேரள மாநிலத்தில் 3 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேபோல் தமிழக அரசும் உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மாணவி

சீனாவில் தங்கியிருந்து படித்து வரும் மற்றும் அங்கு வேலை செய்து வரும் இந்தியாவை சேர்ந்தவர்கள் அங்கிருந்து விமானம் மூலம் சொந்த ஊருக்கு வரும்போது அவர்களை தீவிர மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் சிங்காரவேலன் தெருவை சேர்ந்த அரசு ஊழியர் தம்பதியின் மகள் ஒருவர் சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படித்து வருகிறார். அந்த மாணவி கடந்த 31-ந் தேதி சீனாவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து விழுப்புரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.

தனி வார்டில் அனுமதி

இந்நிலையில் அந்த மருத்துவ மாணவிக்கு நேற்று முன்தினம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் உள்ள மருந்துக்கடைக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். இருந்தபோதிலும் காய்ச்சல் குணமாகாமல் மிகவும் அவதிப்பட்டார். பின்னர் அந்த மாணவியை அவரது பெற்றோர், விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் ஊசி போட்டு மருந்து, மாத்திரை கொடுத்தனர். மேலும் அந்த மாணவி சீனாவில் இருந்து திரும்பியுள்ளதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏதேனும் இருக்குமோ? என்ற சந்தேகத்தின்பேரில் அவருடைய ரத்த மாதிரி உள்ளிட்டவற்றை எடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். மேலும் அவரை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் அவ்வப்போது கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் 13 பேர் கண்காணிப்பு

இதேபோல் சீனாவில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த, படித்து வந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளனர். அவர்களுக்கும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா? என்று அவர்கள் 13 பேரின் வீடுகளுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் நேரடியாக சென்று அவர்களது உடல்நிலை குறித்து கண்காணித்து வருகின்றனர்.

திருவாரூர் வாலிபர்

இதேபோல் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள சோத்திரியம் கிராமத்தை சேர்ந்த பாலு மகன் அசோக்குமார்(வயது 33) சீனாவில் உள்ள ‌ஷாங்காய் நகரில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் 31-ந் தேதி சென்னை விமான நிலையம் வழியாக ஊருக்கு திரும்பி வந்தார். அவருக்கு சளி தொந்தரவு காரணமாக சென்னை ராயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அப்போது அவர் சீனாவில் இருந்து வந்ததை அறிந்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருக்கலாமா? என சந்தேகம் அடைந்து உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள சோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவருக்கு தற்போது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.


Next Story