அரியலூர் மாவட்டத்தில் சாலையில் தொடர்ந்து கனரக வாகனங்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்


அரியலூர் மாவட்டத்தில் சாலையில் தொடர்ந்து கனரக வாகனங்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 6 Feb 2020 10:30 PM GMT (Updated: 6 Feb 2020 6:53 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் சாலையில் தொடர்ந்து கனரக வாகனங்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். அப்போது அவர் அரியலூர் மாவட்டத்தில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் கனரக வாகன டிரைவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து பேசுகையில், கனரக வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி வைப்பதை டிரைவர்கள் தவிர்க்க வேண்டும். சாலையில் தொடர்ந்து கனரக வாகனங்கள் இடைவெளியில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும். ஒரு கனரக வாகனத்தில் 2 டிரைவர்கள் இருக்க வேண்டும். கட்டாயம் தார்ப்பாய் அணிந்து கனரக வாகனங்களை இயக்க வேண்டும். அதிக பாரம் ஏற்றிக்கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். அனைத்து கனரக வாகனங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். சிமெண்டு தொழிற்சாலை நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் இயங்கும் கனரக வாகனங்களை கண்காணிக்கும் வகையில் தொடர்ந்து மொபைல் சோதனை செய்ய வேண்டும். மேலும் டிரைவர்களுக்கு உடற்தகுதி ஆய்வு செய்து வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பற்றது, அதனை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பான பயணத்திற்கும் உறுதி அளிக்கும் வகையில் அனைவரும் ஒத்துழைப்பு தந்து சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்றார். இதில் அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணபவன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன், தனிப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி, அனைத்து சிமெண்டு தொழிற்சாலை மக்கள் தொடர்பு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் கனரக வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story