சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க கோரி விருத்தாசலத்தில் அரசியல் கட்சியினர் சாலை மறியல்


சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க கோரி விருத்தாசலத்தில் அரசியல் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Feb 2020 4:30 AM IST (Updated: 7 Feb 2020 2:39 AM IST)
t-max-icont-min-icon

சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க கோரி விருத்தாசலத்தில் அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்,

போக்குவரத்து நெரிசலை குறைக்க விருத்தாசலம்- பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.162 கோடி மதிப்பில் சாலை விரிவுபடுத்தும் பணி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணி கடந்த 2018-ம் ஆண்டே முடிந்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் சாலை விரிவாக்க பணிகள் இது வரை முடியவில்லை.

ஆங்காங்கே சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் பல இடங்களில் தரைப்பாலங்கள் கட்டும் பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தற்போது வரை சுமார் 40 சதவீத அளவிற்கு மட்டுமே சாலை விரிவாக்க பணிகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் நடந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

சாலை மறியல்

இது குறித்து புகார் அளித்த பின்பும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நகர செயலாளர் சேகர் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் ஆர்.கே.குமார், தளபதிகுமார், தே.மு.தி.க. மணிகண்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த அய்யப்பன், நாம் தமிழர் கட்சி கதிர்காமன், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி கோகுல கிறிஸ்டீபன் மற்றும் பொதுமக்கள் விருத்தாசலம் பூதாமூரில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள பரங்கிப்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை கேட்ட அதிகாரிகள், பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சாலை பணிகளை விரைந்து முடிக்கவில்லை யென்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என கூறி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story