கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: சீனாவில் இருந்து நாமக்கல் வந்த 30 பேர் தொடர் கண்காணிப்பு


கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: சீனாவில் இருந்து நாமக்கல் வந்த 30 பேர் தொடர் கண்காணிப்பு
x
தினத்தந்தி 9 Feb 2020 5:45 AM IST (Updated: 9 Feb 2020 2:20 AM IST)
t-max-icont-min-icon

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதையொட்டி அங்கிருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு வந்த 30 பேர் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம் கூறினார்.

நாமக்கல்,

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஏராளமானவர்கள் இறந்து உள்ளனர். இந்த நிலையில் சீனாவில் தங்கி உள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி வருகின்றனர்.

இந்தியாவை சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து நாடு திரும்பி உள்ளனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்திற்கும் இதுவரை 30 பேர் சீனாவில் இருந்து திரும்பி வந்து உள்ளனர். இவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சிறப்பு வார்டுகள்

இதற்கிடையே கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கும் ஆங்காங்கே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஆஸ்பத்திரிகளில் இதற்கென தனியாக சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 6 படுக்கைகளுடன் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம் கூறியதாவது:- சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அங்கிருந்து நாமக்கல் மாவட்டத்துக்கு 30 பேர் வந்தனர். அவர்களை வீட்டில் வைத்து கண்காணித்து வருகிறோம்.

28 நாட்கள்

தினசரி காலை, மாலை ஒரு டாக்டர், ஒரு சுகாதார ஆய்வாளர் நேரில் சென்று காய்ச்சல், இருமல், சளி ஏதாவது உள்ளதா? என பார்த்து வருகின்றனர். இதுவரைக்கும் யாருக்கும் எவ்வித அறிகுறியும் தெரியவில்லை. இருப்பினும் தொடர்ந்து 28 நாட்கள் கண்காணிக்க உள்ளோம்.

இதேபோல் ஒவ்வொரு வட்டாரத்திலும் தினசரி 10 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி யாருக்கும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story