தேனி கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு குவிந்த மக்கள்


தேனி கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 11 Feb 2020 3:30 AM IST (Updated: 11 Feb 2020 1:55 AM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், வீட்டுமனை பட்டா கேட்டு ஏராளமான மக்கள் குவிந்தனர்.

தேனி,

தேனி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். இதில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், கல்விக்கடன் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 440 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். பின்னர் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதுதொடர்பாக விசாரணை நடத்தி 2 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து 103 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், துணை ஆட்சியர் முருகசெல்வி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் உத்தமபாளையத்தை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில், தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை சர்வே செய்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கம்பத்தை சேர்ந்த பொதுமக்கள், புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் தேவேந்திர பவுன்ராஜ் தலைமையில் மனு கொடுத்தனர். அதில், கம்பம் பகுதியில் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆண்டிப்பட்டி, துரைச்சாமிபுரத்தை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுத்த மனுவில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் எங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூறியிருந்தனர். இதேபோல் ஏராளமானோர் வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்.

அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேலப்பரவு பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கொடுத்த மனுவில், இலவச மின்சாரம் கேட்டு மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தால், அதற்கு முன்வைப்பு தொகையாக ரூ.2 ஆயிரத்து 830-ஐ செலுத்த சொல்கின்றனர். அவ்வாறு பணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பை துண்டித்து விடுவதாக கூறுகின்றனர். எனவே இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். 

Next Story