சொத்து தகராறில் பெண் குத்திக்கொலை; கத்தியுடன் போலீசில் தம்பி சரண்
ஆரணியில் சொத்து தகராறில் பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரை கொன்றதாக போலீசில் தம்பி சரண் அடைந்தார்.
ஆரணி,
ஆரணியில் உள்ள புதுகாமூர் பகுதியில் வசித்தவர் கிறிஸ்டி எலிசபெத் (வயது 55). இவர் கடந்த 10 வருடங்களாக கணவர் ஜெய்சனை பிரிந்து தாயார் சகுந்தலாவுடன் வசித்து வந்தார். இவரது மகன் ராகேஷ் சென்னையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார்.
கிறிஸ்டி எலிசபெத்தின் தம்பி ஐசக்சந்தோஷம் (40) கார் டிரைவராக உள்ளார். அவர் அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஐசக்சந்தோஷம், தாயார் வீட்டிற்கு அடிக்கடி செல்வார். அப்போது அக்காள் எலிசபெத்திடம், நான் மனைவி, குழந்தைகளுடன் மேல் பகுதியில் தங்கிக்கொள்கிறேன். எனக்குரிய பங்கும் வீட்டில் உள்ளது என கூறியுள்ளார். அதற்கு எலிசபெத் மறுத்து வந்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை ஐசக்சந்தோஷம் கத்தியுடன் தாயார் வீட்டிற்கு சென்றார். அங்கு அக்காளிடம் மீண்டும் அது குறித்து பேசியபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டின் மேல்பகுதியை தராவிட்டால் குத்தி கொன்று விடுவேன் என மிரட்டினார். அதன்பின்னரும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் எலிசபெத்தை ஐசக்சந்தோஷம் கத்தியால் வயிற்றில் குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சுருண்டு விழுந்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு தாயார் சகுந்தலா மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்து எலிசபெத்தை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இதனிடையே இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து ஐசக்சந்தோஷம் கத்தியுடன் ஆரணி நகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் விசாரித்தபோது நடந்த சம்பவம் குறித்து கூறினார். இதனை தொடர்ந்து ஐசக்சந்தோஷத்தை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் கைது செய்தனர். கைதான இவருக்கு மனைவி மற்றும் 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். சொத்து தகராறில் அக்காளை தம்பியே கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story