பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பை சட்டமாக மாற்ற வேண்டும் முத்தரசன் பேட்டி


பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பை சட்டமாக மாற்ற வேண்டும் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 19 Feb 2020 12:15 AM GMT (Updated: 18 Feb 2020 6:26 PM GMT)

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பை சட்டமாக மாற்ற வேண்டும் என்று முத்தரசன் கூறினார்.

கும்பகோணம்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கான மாநாடு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று நடந்தது. மாநாட்டுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட செயலாளர் பாரதி வரவேற்றார்.

மாநாட்டில், காந்தி கிராம பல்கலைக்கழக பேராசிரியர் பழனிதுரை ‘உள்ளாட்சியில் எவ்வாறு நிர்வாகம் செய்ய வேண்டும்’ என்பது குறித்து விளக்கம் அளித்தார். மாநாட்டில் கலந்து கொண்ட கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தலை விரைந்து நடத்த தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல் கொள்முதலில் முறைகேடு

பல ஆண்டுகளுக்கு பிறகு செயல்பட தொடங்கி உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு தேவையான நிதியை வழங்க வேண்டும். காவிரி டெல்டாவில் நெல் கொள்முதலில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளது. அந்த முறைகேடுகளை களைய வேண்டும். அதை விட்டு விட்டு கொள்முதல் பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்து, நிர்வாகம் நன்றாக நடப்பதாக நாடகமாடுகிறார்கள்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் மட்டும் போராடவில்லை. அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 7 மாநிலங்களில் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என கூறி உள்ளனர். அதேபோல தமிழக சட்டசபையிலும் விவாதம் நடத்தி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

சட்டமாக மாற்ற வேண்டும்

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதை வரவேற்கிறோம். ஆனால் தமிழக முதல்-அமைச்சர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இங்கு கொண்டு வர வேண்டாம் என மத்திய அரசிடம் கெஞ்சுவதுபோல் கடிதம் எழுதி உள்ளார். ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கி உள்ளதை ரத்து செய்ய வேண்டும்.

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிப்புடன் நின்று விடாமல், அதை சட்டமாக மாற்ற வேண்டும். வெறும் அறிவிப்புக்காக முதல்-அமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துவது விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும். காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. அதற்கு மாநில அரசு துணை போகிறது. வருகிற சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story