அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி - 2 பேர் கைது


அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி - 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2020 3:45 AM IST (Updated: 20 Feb 2020 10:27 PM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

காட்டுமன்னார்கோவிலை சேர்ந்தவர் கிரு‌‌ஷ்ணசாமி (வயது 70), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருடைய மகன் மணிவண்ணன்(33). கிரு‌‌ஷ்ணசாமிக்கும், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த ஹரிதாஸ்(73) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஹரிதாஸ் மூலம் திட்டக்குடி அருகே உள்ள டி.குடிக்காட்டை சேர்ந்த சமரசம்(47) என்பவர், கிரு‌‌ஷ்ணசாமிக்கு அறிமுகமானார்.

இந்த நிலையில் கிரு‌‌ஷ்ணசாமி, என்ஜினீயரிங் படித்துள்ள தனது மகனுக்கு வேலை தேடி வந்தார். இதுபற்றி அறிந்த ஹரிதாஸ், சமரசம் ஆகியோர் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மணிவண்ணனுக்கு உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்காக தங்களுக்கு ரூ.9 லட்சம் தரவேண்டும் என கிரு‌‌ஷ்ணசாமியிடம் கூறினர்.

இதை உண்மை என்று நம்பிய அவர், முதல் தவணையாக சமரசத்திடம் ரூ.6 லட்சம் வழங்கினார். அதனை தொடர்ந்து சிறிது நாட்களுக்கு பிறகு ஹரிதாஸ் மூலம் சமரசத்துக்கு ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது. பணத்தை பெற்றுக்கொண்ட இருவரும் 31.1.2017 தேதியிட்ட பணி நியமன ஆணை நகலை கிரு‌‌ஷ்ணசாமியிடம் கொடுத்து விட்டு, பணி நியமன ஆணைக்கான அசல் சான்றிதழை 10 நாட்களுக்குள் தருவதாக கூறிச்சென்றனர். ஆனால் அதன் பிறகு அவர்கள் பணி நியமன ஆணை வழங்கவில்லை.

இதனால் அவர், ஹரிதாஸ், சமரசம் ஆகியோரை சந்தித்து, போக்குவரத்து கழக பணிமனையில் வேலை வாங்கி கொடுங்கள், இல்லையெனில் கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள் என கேட்டார். அப்போது அவர்கள் இருவரும் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்து, கிரு‌‌ஷ்ணசாமிக்கு மிரட்டல் விடுத்தனர்.

அப்போது தான் இருவரும் வேலை வாங்கி தருவதாக கூறி தன்னிடம் பணம் பெற்று மோசடி செய்தது கிரு‌‌ஷ்ணசாமிக்கு தெரியவந்தது. இதையடுத்து ஹரிதாஸ், சமரசம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கிரு‌‌ஷ்ணசாமி புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தி, வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த ஹரிதாஸ், சமரசம் ஆகிய 2 பேரை காட்டுமன்னார் கோவிலில் கைது செய்தனர்.

Next Story