பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவில் தமிழக அரசு இரட்டை வேடம் முத்தரசன் குற்றச்சாட்டு


பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவில் தமிழக அரசு இரட்டை வேடம் முத்தரசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 Feb 2020 12:15 AM GMT (Updated: 20 Feb 2020 8:39 PM GMT)

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று முத்தரசன் குற்றம்சாட்டினார்.

திருச்சி,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுக்கின்றனர். ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்த ஆட்சேபனை இல்லை என்கின்றனர். இதில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்றார். அதனை நாங்களும் வரவேற்றோம். ஆனால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவில், ஹைட்ரோகார்பன் திட்டத்தில் ஏற்கனவே வேதாந்தா நிறுவனம் அல்லது ஓ.என்.ஜி.சி.க்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படாது. இனிமேல் புதிதாக வருவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்ற முறையில் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அனைத்திலும் இரட்டை வேடம் போடுகிற அரசாக தமிழக அரசு உள்ளது.

போராட்டம் தொடரும்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக மக்களின் சார்பில் 2 கோடிக்கும் மேற்பட்டவர்களிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் இந்த சட்டத்தை எக்காரணத்தை கொண்டும் திரும்ப பெறமாட்டோம் என்று பிரதமர் மோடி சொல்கிறார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல், தான் ஒரு சர்வாதிகாரி என மோடி வெளிப்படுத்துகிறார். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சி பாலக்கரை ராமகிருஷ்ணா பாலம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி கிழக்கு பகுதி செயலாளர் அன்சர்தீன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

Next Story