கோழிகளில் கொரோனா வைரஸ் தொற்று என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை


கோழிகளில் கொரோனா வைரஸ் தொற்று என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Feb 2020 12:00 AM GMT (Updated: 25 Feb 2020 6:57 PM GMT)

கோழிகளில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பண்ணையாளர்கள் நேரில் வலியுறுத்தினர்.

நாமக்கல்,

நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கரின் தாயார் பழனியம்மாள் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் காலமானதை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நாமக்கல் வந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் அவரிடம் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ், தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நலவாரியம்

தமிழகம் முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியில் இந்தியாவிலேயே முதலிடம் வகித்து வருகிறது. இதன் மூலம் சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் நேரடியாகவும், மறைமுகமாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. சுமார் 3 லட்சம் பேருக்கு மேல் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ஆனால் இந்த தொழிலில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதில் தடைகளும், சிக்கல்களும் ஏற்படுகின்றன.

தமிழகத்தில் நெசவாளர் நலவாரியம், மீன்வள வாரியம் உள்ளது. அதேபோல கோழிப்பண்ணையாளர்களின் நலன் காக்க நலவாரியம் அமைத்து கொடுத்தால் எங்கள் தொழிலில் ஏற்படும் குறைகளை நேரடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிவாரணம் பெற ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

கொரோனா வைரஸ்

இதைத்தொடர்ந்து கோழிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோழிப்பண்ணையாளர்கள் முதல்-அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து வாங்கிலி சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:- கறிக்கோழி தொடர்பாக வாட்ஸ்-அப்பில் பரவும் வதந்தி காரணமாக பண்ணையாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளோம். தற்போது ஒரு கோழியின் உற்பத்தி செலவு ரூ.75 ஆகிறது. ஆனால் ரூ.35-க்கு விற்பனை செய்யும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என டாக்டர்களே தெரிவித்து விட்டனர். எனவே இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.250 கோடி ந‌‌ஷ்டம்

கறிக்கோழி பண்ணையாளர்கள் தரப்பில் பங்கேற்ற கால்நடை டாக்டர் செல்வகுமார் கூறியதாவது:-

கறிக்கோழி, முட்டைக்கோழி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல் பரவி வருகிறது. இதனால் பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வதந்தி காரணமாக எங்களுக்கு சமீபகாலமாக ரூ.250 கோடிக்கு ந‌‌ஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ‘சிக்கன் மேளா’ நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story