சாவில் மர்மம் நீடிப்பு: லாரி டிரைவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் சேலத்தில் பரபரப்பு


சாவில் மர்மம் நீடிப்பு: லாரி டிரைவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் சேலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Feb 2020 5:00 AM IST (Updated: 27 Feb 2020 3:11 AM IST)
t-max-icont-min-icon

லாரி டிரைவர் சாவில் மர்மம் நீடித்து வருவதால் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கருப்பூர்,

ஓமலூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் சூர்யா (வயது 27). லாரி டிரைவரான இவர், கடந்த 24-ந் தேதி பாகல்பட்டி ரோட்டில் நிறுத்தி உள்ள தனது மினி லாரியில் படுத்துக்கொள்வதாக மனைவி சுகன்யாவிடம் கூறிவிட்டு அங்கு சென்றார்.

அப்போது, சூர்யாவை சிலர் ஓட, ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களால் வெட்டியதாகவும், இதனால் தன்னை காப்பாற்றுமாறும் தனது சகோதரர் சுரேந்திரனுக்கு அவர் போனில் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உறவினர்களுடன், பாகல்பட்டி ரெயில் தண்டவாளத்திற்கு சென்று பார்த்தபோது, தலையில் பயங்கர வெட்டுக்காயங்களுடன் சூர்யா கிடந்தார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் மற்றும் ஓமலூர் போலீசார் சம்பவ இடமான பாகல்பட்டி ரெயில் தண்டவாள பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மர்மம் நீடிப்பு

இதனிடையே, உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக சூர்யாவை தாக்கி சிலர் கொலை செய்துவிட்டதாக அவரது மனைவி சுகன்யா, ஓமலூர் போலீசில் புகார் செய்துள்ளார். ஆனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரது சாவில் மர்மம் நீடிப்பதால் மர்மமான முறையில் இறந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், சூர்யா இறந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். இந்த சம்பவத்திற்கு தேர்தல் முன்விரோதம் தான் காரணம் என்றும், இதுகுறித்து ஏற்கனவே தகவல் தெரிவித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சூர்யாவின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

சாலை மறியல்

இந்தநிலையில், இறந்துபோன சூர்யாவின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர் சேகர், தங்கமணி, தம்பி சுரேந்திரன் மற்றும் உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் சூர்யாவின் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என கோ‌‌ஷமிட்டனர். மேலும், அவ்வழியாக வந்த பஸ்சின் முன்புறம் அவர்கள் படுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ் உதவி கமி‌‌ஷனர் ஈஸ்வரன், டவுன் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

அப்போது, கொலையாளிகளை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து போலீசார் சமரசத்தை தொடர்ந்து அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனிைடயே சம்பவ இடத்தில் கிடைத்த வீடியோ பதிவு ஒன்றையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். லாரி டிரைவரான சூர்யா கொலை செய்யப்பட்டாரா? அல்லது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்பது அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தால் தான் முழுவிவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் அவரது சாவில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.


Next Story