ஈரோடு பெருந்துறை ரோட்டில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜனதா கட்சியினர் ஊர்வலம் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்


ஈரோடு பெருந்துறை ரோட்டில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜனதா கட்சியினர் ஊர்வலம் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்
x
தினத்தந்தி 29 Feb 2020 5:00 AM IST (Updated: 29 Feb 2020 5:00 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு பெருந்துறை ரோட்டில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜனதா கட்சியினர் ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சட்டம் முஸ்லிம் மக்களை கடுமையாக பாதிக்கும் என்று முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சிகளும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் பா.ஜனதா கட்சியினர் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு இயக்கங்கள் நடத்தி வருகிறார்கள். ஊர்வலம், பொதுக்கூட்டம், தெருமுனைக்கூட்டம் என்று பொதுமக்களிடம் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எடுத்துச்சொல்ல பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

அதன்படி ஈரோடு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு ஊர்வலம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இதற்காக ஈரோடு மாவட்டம் முழுவதிலும் இருந்து பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள காலிங்கராயன் விருந்தினர் மாளிகை வளாகத்தில் குவிந்தனர். அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு ஈரோடு மாவட்ட தலைவர் (தெற்கு) எஸ்.ஏ.சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் வி.சி.அஜித்குமார், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் தொடங்கும் முன்பு புதுடெல்லி கலவரத்தில் உயிரிழந்த போலீஸ்காரர் ரத்தன்லால் உருவப்படத்துக்கு தேசிய இளைஞர் அணி துணைத்தலைவர் ஏ.பி.முருகானந்தம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இந்து முன்னணி மாநில தலைவர் பூசப்பன், பா.ஜனதா கோட்ட பொறுப்பாளர் பே.வைரவேல், வக்கீல் அணி மாநில அமைப்பாளர் என்.பி.பழனிசாமி, மாநில பிரசார அணி பொறுப்பாளர் ஏ.சரவணன், மாநில செயலாளர் டாக்டர் சி.கே.சரஸ்வதி ஆகியோர் வழிகாட்ட பா.ஜனதா கட்சியினர் தங்கள் கட்சி கொடிகளை கையில் ஏந்தியபடியும், கட்சி கொடி வண்ணத்தில் தோள்பட்டை துண்டு அணிந்தும் ஊர்வலமாக சென்றனர். தேசியக்கொடியும் சிலர் கைகளில் ஏந்தி வந்தனர்.

இந்த ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்டபெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்கு முன்னதாக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், பன்னீர்செல்வன், செல்வம், நாகலட்சுமி மற்றும் போலீசார் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி, கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை என்று மறுத்தனர். ஊர்வலத்தின் முன்னணியில் வந்தவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க இருப்பதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக ஊர்வலத்தின் நோக்கம் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை பா.ஜனதாவினர் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டியதன் கட்டாயம் குறித்து தேசிய இளைஞர் அணி துணைத்தலைவர் ஏ.பி.முருகானந்தம் பேசினார்.

ஊர்வலத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் குணசேகரன், ஈஸ்வரமூர்த்தி, விவேகானந்தன், செயலாளர் ஏ.பி.கிருஷ்ணகுமார், துணைத்தலைவர் சின்னத்துரை, பொருளாளர் தீபக்ராஜா, முன்னாள் மாவட்ட தலைவர் பொன்.ராஜேஸ்குமார், இந்து முன்னணி பொறுப்பாளர் அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வல முடிவில் முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் சி.கதிரவனை சந்தித்து மனு வழங்கினார்கள். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

குடியுரிமை திருத்த சட்டம் பல்வேறு கட்சிகளின் ஒப்புதலோடு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் சட்டமாக அமலுக்கு வந்து உள்ளது. எதிர்க்கட்சிகளும், சமூக விரோதிகளும் சட்டம் குறித்து பொதுமக்களிடம் தவறான கருத்துகளையும், பொய் பிரசாரங்களையும் செய்து கலவரம் ஏற்படுத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பிரதமர் உறுதிபட கூறி இருக்கிறார். தமிழக முதல்-அமைச்சரும் பாதிப்பு இல்லை என்று சட்டமன்றத்தில் பேசும்போது கூறி இருக்கிறார். ஆனால் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் பேரணிகளில் பெண்களையும், குழந்தைகளையும் பங்கெடுக்க வைத்து தமிழகமெங்கும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோர்ட்டு, காவல்துறை தடை விதித்த பிறகும் போராட்டம் நடந்து வருகிறது. இதன்மூலம் தமிழகத்தை கலவர பூமியாக மாற்றத்துடிக்கும் தீய சக்திகள் மீது நடவடிக்கை எடுத்து, போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

பா.ஜனதாவினர் ஊர்வலத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலக வளாகம், பெருந்துறை ரோடு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

Next Story