சினிமா மட்டும் தான் தெரியும்: கமல்ஹாசனுக்கு அரசு துறைகள் பற்றி தெரியாது - மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
“கமல்ஹாசனுக்கு தமிழகத்தில் உள்ள அரசின் துறைகள் பற்றி தெரியாது. அவருக்கு சினிமா மட்டும் தான் தெரியும்” என மதுரையில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மதுரை,
ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மத்திய மந்திரி ஹர்ஷ வர்தன் ஆகியோர் சென்னை செல்வதற்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து கட்டுமான பணிகளும் சிறப்பாக நடக்கும். நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழகத்தில் உள்ள அரசின் துறைகள் பற்றி எதுவும் தெரியாது. அவருக்கு தெரிந்தது சினிமா துறை மட்டும் தான். கிராமத்தில் கூறும் பழமொழிக்கு ஒப்பாக கமல்ஹாசன் பேசி வருகிறார்.
நான், விவசாயியாக தான் வருமானவரியை தற்போது வரையில் கட்டி வருகிறேன். சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும், முதல்- அமைச்சராக இருந்தபோதும் சரி, எப்போதுமே விவசாயியாக தான் வருமான வரியை கட்டி வருகிறேன். அதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் நான் விவசாயி என்பதை. மு.க.ஸ்டாலின் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது குரங்கு கதை கூறியது அவர் எண்ணங்கள் எவ்வாறு இருக்கிறது என்பதை காண்பிக்கிறது.
குடியுரிமை திருத்த சட்ட போராட்டம் குறித்து சட்டமன்றத்தில் தெளிவாக கூறி விட்டேன். வருவாய்த்துறை அமைச்சரும் அதுகுறித்து தெளிவாக கூறி விட்டார். இந்த சட்டத்தை முதல் முறையாக அறிமுகப்படுத்தியது தி.மு.க. தான். தற்போது அந்த சட்டத்தில் கூடுதலாக மூன்று அம்சங்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
ராஜகண்ணப்பனுக்கு அ.தி.மு.க. தான் விலாசம் கொடுத்தது. அ.தி.மு.க.விற்கு துரோகம் நினைப்பவர்கள் விலாசம் இல்லாமல் போய்விடுவார்கள். கிருஷ்ணகிரியை சேர்ந்த பெருமாள் தலைமையில் ஏற்கனவே பனை வாரியம் அமைக்கப்பட்டு விட்டது. எந்த துறையில் முறைகேடு இருந்தாலும் அதுதொடர்பாக விசாரித்து தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதில் மாற்று கருத்து கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, கிராமப்புற மக்களுக்கு இணையதள வசதி வழங்கியதில் ஊழல் புகார் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “தற்போது தகவல் தொழில்நுட்ப செயலாளர் பணியில் இருந்து வருகிறார். இது தவறான செய்தி. கிராமப்புறங்களில் இணையதள வசதி வழங்கும் திட்டம் குறித்து எதிர்க்கட்சியினர் தவறான பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இது மகத்தான திட்டம். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டால் மக்கள் மனதில் அ.தி.மு.க. நிலையாக நின்றுவிடும் என்ற அச்சத்தில் பொய் பிரசாரம் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. டெல்லியில் அமைந்துள்ளது போல், அதிநவீன வசதிகளுடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய மந்திரி கூறியுள்ளார். அதன்படி அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது”என்றார்.
தே.மு.தி.க., மாநிலங்களவையில் எம்.பி. பதவி கேட்பது குறித்து கேட்டபோது, வீட்டில் வயதுக்கு வந்த பெண் இருந்தால் அனைவரும் பெண்கேட்டு வருவது வழக்கம் தான். அதுபோன்று கூட்டணியில் இருப்பவர்கள் எம்.பி. பதவியை கேட்கதான் செய்வார்கள். இதுதொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
இதைதொடர்ந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் ஆகியோர் விமானம் மூலம் சென்னை சென்றனர்.
Related Tags :
Next Story