திருப்பூரில் வீரப்பன் மனைவி பெயரில் ரூ.8½ லட்சம் மோசடி - தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார்


திருப்பூரில் வீரப்பன் மனைவி பெயரில் ரூ.8½ லட்சம் மோசடி - தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 4 March 2020 4:45 AM IST (Updated: 4 March 2020 1:13 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி பெயரில் ரூ.8½ லட்சம் மோசடி செய்ததாக தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், 

திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்பிரதாப்(வயது 39). இவர் கட்டிட கட்டுமான பொருட்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று காலை திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாராயணனிடம் புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15 வேலம்பாளையத்தை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் தனது உறவினரான குமாரசாமி நகரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஆறுமுகத்துக்கு தொழில் தேவைக்காக பணம் தேவைப்படுகிறது என்று என்னிடம் கேட்டார். முதலில் நான் மறுத்துவிட்டேன். அதற்கு பிறகு திருப்பூரை சேர்ந்த தனபால் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை பரமேஸ்வரன் என்னிடம் அழைத்து வந்தார். அவர்கள், ‘சந்தனக்கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியிடம் பரம்பரை சொத்தான ஒரு கலைநயமிக்க ஒரு பானை உள்ளது. அதை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றால் அரசாங்க நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறை செலவுக்காக பணம் தேவைப்படுகிறது’ என்று என்னிடம் கூறினார்கள்.

அந்த பானையை பழம்பொருள் விற்பனையாளர்களிடம் விற்பனைக்கு பேசியிருப்பதாகவும், அதை விற்பனை செய்து கொடுத்தால் ரூ.1 கோடி தங்கள் வங்கிக்கணக்குக்கு வரும். அந்த பணம் வந்ததும் என்னிடம் பெற்ற தொகையை விட கூடுதல் தொகையை எனது வங்கிக்கணக்குக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தனர். அதன் அடிப்படையில் என்னிடம் இருந்து 4 தவணையாக ரூ.8½ லட்சம் மற்றும் எனது ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், பான் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெற்று சென்றனர். இதுவரை எனது பணத்தை திருப்பித்தரவில்லை.

இதுகுறித்து பரமேஸ்வரன் மற்றும் ஆறுமுகம் ஆகியோரிடம் பலமுறை பணத்தை திருப்பி கேட்டேன். தொடர்ந்து இழுத்தடித்து வந்தனர். அதன்பிறகு ஆறுமுகம், அந்த பானையை விற்பனை செய்ததில் வெளிநாட்டில் இருந்து ஒரு கலைபொருள் விற்பனை நிறுவனத்திடம் இருந்து ஒரு தனியார் நிறுவனத்தின் வங்கிக்கணக்குக்கு பணம் வந்து விட்டதாகும், அந்த நிறுவனம் தனக்கு முன்பணம் கொடுத்து இருப்பதாகவும், விரைவில் முழுப்பணம் எனது கைக்கு கிடைத்துவிடும் என்று தெரிவித்தார்.

மேலும் ரிசர்வ் வங்கி கவர்னர், மத்திய நிதி மந்திரி ஆகியோரின் கையெழுத்திட்ட சான்றிதழையும் ஆறுமுகம் என்னிடம் காண்பித்தார். அதன்பிறகும் பணம் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஆண்டுகணக்கில் இழுத்தடித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி ஆறுமுகத்திடம் செல்போனில் பேசியபோது, அந்த பானையின் மதிப்பு பல கோடி என்றும், பணம் வந்ததும் திருப்பிக்கொடுப்பதாக கூறினார். அதன்பிறகு ஆறுமுகத்தை நேரில் சந்தித்து பேசியபோது தான் தி.மு.க. முக்கிய பிரமுகர்களிடம் தொடர்பில் இருப்பதால் தன்னிடம் பணம் கேட்டு வற்புறுத்தக்கூடாது என்று மிரட்டினார்.

இந்தநிலையில் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாக ஆறுமுகம் கைது செய்யப்பட்ட தகவல் தெரியவந்தது. அதன்பிறகே ஆறுமுகம், பரமேஸ்வரன் மற்றும் தனபால் ஆகியோர் பலரிடம் இதுபோல் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொழில் தேவைக்கு என்று கூறி ரூ.8½ லட்சத்தை என்னிடமும், மேலும் பலரிடமும் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததோடு போலியாக ரிசர்வ் வங்கி ஆவணங்களை காட்டி மோசடிகளில் ஈடுபட்ட ஆறுமுகம், அவருக்கு துணையாக செயல்பட்ட தனபால், பரமேஸ்வரன் ஆகியோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் பிரதமர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரையும் ஆறுமுகம் ஈடுபடுத்தி இருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மனுவை பெற்ற போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாராயணன் இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

Next Story