அமைச்சர் நமச்சிவாயம் திடீர் மாற்றம்: புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக ஏ.வி.சுப்பிரமணியன் நியமனம்


அமைச்சர் நமச்சிவாயம் திடீர் மாற்றம்: புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக ஏ.வி.சுப்பிரமணியன் நியமனம்
x
தினத்தந்தி 5 March 2020 12:23 AM GMT (Updated: 5 March 2020 12:23 AM GMT)

புதுவை காங்கிரஸ் தலைவராக இருந்த அமைச்சர் நமச்சிவாயம் மாற்றப்பட்டு புதிய தலைவராக ஏ.வி.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் தலைவராக நமச்சிவாயம் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

இதைத்தொடர்ந்து புதுவை முதல்-அமைச்சராக நமச்சிவாயம் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்அமைச்சர் பதவி நாராயணசாமிக்கு சென்றது.

தொடர் வெற்றி

எனவே அமைச்சரவையில் நமச்சிவாயம் 2வது இடம் வகித்தார். காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை கடை பிடிக்கப்பட்டபோதிலும் மாநில காங்கிரஸ் தலைவராகவும் நமச்சிவாயமே நீடித்து வந்தார்.

அதன்பின் நடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வெற்றியை ருசித்தது.

மேலிட தலைவர்கள் ஆய்வு

இதனிடையே பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மாற்றப்பட்டனர். அந்த நேரத்தில் புதுவை மாநில தலைவரும் மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அமைச்சர் நமச்சிவாயமே அந்த பதவியில் தொடர்ந்து நீடித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த வாரம் காங்கிரஸ் மேலிட தலைவர்களான முகுல்வாஸ்னிக், முன்னாள் மத்திய மந்திரி வீரப்பமொய்லி, சஞ்சய்தத், ராகவன் எம்.பி. ஆகியோர் புதுவை வந்து தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

விடுவிப்பு

அப்போது கவர்னர், மத்திய அரசின் தலையீடு காரணமாக வாக்குறுதிகள் சரிவர நிறைவேற்றப்படாதது குறித்து கட்சி மேலிட தலைவர்களிடம் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் விளக்கினார்கள். அதன்பின் முதல்- அமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர் நமச்சிவாயமும் டெல்லி சென்று மீண்டும் மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார்கள்.

பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை தனியாக சந்தித்து பேசினார். இந்தநிலையில் புதுவை மாநில தலைவர் பதவியில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏ.வி.சுப்பிரமணியன் நியமனம்

புதுவை மாநில புதிய காங்கிரஸ் தலைவராக ஏ.வி.சுப்பிர மணியன் நியமிக்கப்பட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த இவர் புதுவை மாநிலத்தில் சபாநாயகர், அமைச்சர், துணை சபாநாயகர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 1991-96, 1996-2001, 2001-2006 வரை தொடர்ந்து 3 முறை காரைக்கால் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

கடந்த 2008 முதல் 2015 வரை புதுவை மாநில காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் அவர் தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story