ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலில் நவீன கருவிகளுடன் தங்க புதையலை தேடிய 2 பேர் கைது


ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலில் நவீன கருவிகளுடன் தங்க புதையலை தேடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 March 2020 6:00 AM IST (Updated: 5 March 2020 11:17 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலில் நவீன கருவிகளுடன் தங்க புதையலை தேடிய 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசநல்லூரில் கற்கடேஸ்வரர் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பள்ளம் தோண்டும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அங்கு 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் சில கருவிகள் இருந்தன.

கிராம மக்கள் எதற்காக கோவிலில் பள்ளம் தோண்டி கொண்டிருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் ஏதும் கூறாத இருவரும், அங்கிருந்து நழுவி செல்ல முயன்றனர். இதையடுத்து அவர்களை சுற்றி வளைத்துக்கொண்ட கிராம மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மெட்டல் டிடெக்டர்

தகவலின்பேரில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், இன்ஸ்பெக்டர்கள் விஜயா, கவிதா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் இருவரும் கும்பகோணம் அருகே சோழபுரம் உப்புகார தெருவை சேர்ந்த இப்னுஹாலித்(வயது 36), பீர்முகமது(65) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

அவர்களிடம் ‘மெட்டல் டிடெக்டர்’ உள்ளிட்ட நவீன கருவிகள் இருந்ததும், புதையலை தேடுவதற்காக கோவிலில் பள்ளம் தோண்டியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த கருவிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

தங்க புதையல் இருப்பதாக தகவல்

இப்னுஹாலித், பீர்முகமது ஆகிய 2 பேரும் ‘யூ டியூப்பில்’ பழங்கால கோவில்கள், புதையல்கள் உள்ள கோவில்கள் பற்றிய விவரங்களை தொடர்ந்து தேடி வந்துள்ளனர். ‘யூ டியூபில்’ திருவிசநல்லூர் கற்கடேஸ்வரர் கோவிலில் தங்க புதையல் இருப்பதாக பதிவிடப்பட்டிருந்த தகவலை இருவரும் பார்த்துள்ளனர்.

இதையடுத்து கோவிலில் இருந்து புதையலை எடுக்க இருவரும் திட்டமிட்டனர். அதன்படி ஆந்திர மாநிலத்தில் இருந்து பள்ளம் தோண்டுவதற்கு பயன்படும் நவீன கையடக்க கருவியை வாங்கி உள்ளனர். மேலும் பூமிக்கடியில் உலோகங்கள் உள்ளதா? என கண்டறிய ‘மெட்டல் டிடெக்டர்’ கருவியையும் வாங்கி உள்ளனர். இந்த நவீன கருவிகளுடன் கோவிலுக்கு வந்து தங்க புதையலை தேடுவதற்காக பள்ளம் தோண்டியபோது கிராம மக்களிடம் இருவரும் பிடிபட்டுள்ளனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

பரபரப்பு

கைதான இருவரும் நவீன கருவிகளுடன் கோவிலுக்குள் நுழைந்தது தங்க புதையல் தேடவா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? இவர்களுக்கும் சிலை கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு ஏதும் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story