நாகையில் ரூ.367 கோடியில், புதிய மருத்துவக்கல்லூரி; முதல்-அமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்


நாகையில் ரூ.367 கோடியில், புதிய மருத்துவக்கல்லூரி; முதல்-அமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்
x
தினத்தந்தி 7 March 2020 5:12 AM IST (Updated: 7 March 2020 5:12 AM IST)
t-max-icont-min-icon

நாகையில், ரூ.367 கோடியில் கட்டப்பட உள்ள புதிய மருத்துவக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(சனிக்கிழமை) நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.

நாகப்பட்டினம்,

நாகையில் மருத்துவக்கல்லூரி அமைத்து தர வேண்டும் என பல ஆண்டு காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தமிழக அரசு நாகை ஊராட்சி ஒன்றியம் ஒரத்தூர் பகுதியில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தது. இதற்காக அந்த பகுதியில் 60.04 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து ரூ.366 கோடியே 85 லட்சம் மதிப்பில் புதிய மருத்துவக்கல்லூரிக்கான நிதி ஒதுக்கப்பட்டு பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டன.

இதில் ரூ.123 கோடியே 5 லட்சம் மதிப்பில் மருத்துவமனை, ரூ.119 கோடியே 3 லட்சம் மதிப்பில் மருத்துவக்கல்லூரி, ரூ.124 கோடியே 77 லட்சம் மதிப்பில் மருத்துவ பேராசியர்கள், பணியாளர்கள், மருத்துவ மாணவர்களுக்கான தங்கும் விடுதிகள் உள்ளிட்டவைகள் அடங்கிய 21 கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதில் 6 அடுக்குகள் கொண்ட மருத்துவமனை கட்டிடம், மருத்துவக்கல்லூரி, நிர்வாக அலுவலகங்கள், செவிலியர்களுக்கான குடியிருப்புகள், வங்கி, அஞ்சலகம், உடற்பயிற்சிக்கூடம் மற்றும் குளிரூட்டப்பட்ட பிணவறை ஆகியவையும் அடங்கும். இங்கு ஆண்டுக்கு 150 மருத்துவ மாணவ-மாணவிகள் பயிலும் வகையில் புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த புதிய மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக விழா நடைபெறும் நாகை ஒரத்தூரில் பிரம்மாண்ட மேடையும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் நாற்காலிகளும் போடப்பட்டுள்ளது.

விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் இருந்து கார் மூலம் நாகைக்கு வருகை தருகிறார். முதல் நிகழ்ச்சியாக காலை 10 மணியளவில், நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் நடைபெறும் உலக மகளிர் தின விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

பின்னர் அங்கிருந்து ஒரத்தூர் வருகை தரும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிதாக கட்டப் பட உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பதுடன், முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாப்பேருரை நிகழ்த்துகிறார்.

விழாவுக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலை வகிக்கிறார். அமைச்சர்கள், ஓ.எஸ்.மணியன், டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் சிறப்புரையாற்று கிறார்கள். மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க் கள், அரசு உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். விழா நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அரசு சுற்றுலா மாளிகையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓய்வெடுக்கிறார்.

மாலையில் திருவாரூரில், விவசாய சங்கங்கள் சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். முதல்-அமைச்சர் நாகை வருகையையொட்டி அவரை வரவேற்கும் விதமாக நாகையில் பல்வேறு இடங்களில் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கட்சி கொடிகள், சாலையின் இருபுறங்களிலும் கட்டப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகை மற்றும் திருவாரூர் வருகையையொட்டி இரண்டு மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இரண்டு மாவட்டங்களிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
1 More update

Next Story