திருச்சியில் பரபரப்பு தண்டவாளத்தில் பாறாங்கல்; ரெயிலை கவிழ்க்க சதியா? போலீசார் விசாரணை


திருச்சியில் பரபரப்பு தண்டவாளத்தில் பாறாங்கல்; ரெயிலை கவிழ்க்க சதியா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 March 2020 12:15 AM GMT (Updated: 7 March 2020 5:20 PM GMT)

திருச்சியில் தண்டவாளத்தில் பாறாங்கல் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரெயிலை கவிழ்க்க சதியா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே குட்ஷெட் பாலத்தின் கீழே கரூர் மார்க்கமாக செல்லக்கூடிய தண்டவாள பாதையில் நேற்று காலை 9.15 மணி அளவில் ஒரு பாறாங்கல் இருந்தது. இதனை தண்டவாள பராமரிப்பு பணி ஊழியர் பணிக்கு செல்லும் போது பார்த்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் மொய்தீன், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு தண்டவாளத்தில் இருந்த பாறாங்கல்லை பார்த்த போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அந்தக்கல் ரெயிலை கவிழ்க்க வேண்டும் என்ற சதியில் வைக்கப்பட்டிருக்கலாம் என அவர்கள் கருதினர். இதையடுத்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து அந்த பாதையில் ரெயில்கள் இயக்க உடனடியாக அனுமதி மறுக்கப்பட்டது. அந்த நேரத்தில் கரூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த பயணிகள் ரெயில் கோட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

கண்காணிப்பு கேமரா

ரெயில்வே பாதுகாப்பு படையின் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பாறாங் கல்லை மோப்பம் பிடித்த நாய் தண்டவாளத்தில் முதலியார்சத்திரம் பகுதி நோக்கி சிறிது தூரம் ஓடிச்சென்றது. அதன்பின்னால் போலீசாரும் ஓடிச்சென்றனர். அப்போது போலீசார் வருவதை கண்டதும் புதரில் மறைந்திருந்த 2 வாலிபர்கள் தப்பி தெருவில் ஓடத்தொடங்கினர்.

மோப்பநாயும் அவர்களின் பின்னால் விரட்டிச்சென்றது. ஆனால் அவர்களை கவ்விபிடிக்க முடியவில்லை. இருவரும் தப்பியோடிவிட்டனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பார்வையிட்டனர். இதில் தப்பியோடும் வாலிபர்களின் அடையாளம் பதிவாகி இருந்தது. அவர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் கருதி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாதிகளா?

இதற்கிடையில் தண்டவாளத்தில் வைத்திருந்த பாறாங்கல்லை ரெயில்வே ஊழியர்கள் அகற்றினர். அதன்பின் அந்த பாதையில் ரெயில்கள் இயக்க அனுமதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கரூர் பயணிகள் ரெயில் அரை மணி நேரம் தாமதத்திற்கு பின் இயக்கப்பட்டது. ரெயிலை கவிழ்க்க சதி செய்து தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்த நபர்கள் பயங்கரவாதிகளா? பெரும் அசம்பாவிதத்தை ஏற்படுத்த வேண்டும் என இச்செயலில் ஈடுபட்டனரா? என பல்வேறு கோணங்களில் திருச்சி ஜங்ஷன் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டவாளத்தில் பாறாங்கல் இருந்தது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்கப்பட்டிருந்த சம்பவம் திருச்சி ரெயில்வே வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story