தஞ்சை ஆதீஸ்வரர் கோவிலில் கொள்ளைபோன 22 சாமி சிலைகள் மீட்பு 4 பேர் கைது


தஞ்சை ஆதீஸ்வரர் கோவிலில் கொள்ளைபோன 22 சாமி சிலைகள் மீட்பு 4 பேர் கைது
x
தினத்தந்தி 8 March 2020 12:30 AM GMT (Updated: 7 March 2020 6:55 PM GMT)

தஞ்சை ஆதீஸ்வரர் கோவிலில் கொள்ளைபோன 22 சாமி சிலைகள் மீட்கப்பட்டன. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கரந்தை புதுக்குளம் ஜைனமுதலி தெருவில் பிரசித்தி பெற்ற ஆதீஸ்வரர் கோவில் உள்ளது. 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவில் சமணர் கோவிலாகும். கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி இரவு இந்த கோவில் கதவை உடைத்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த தலா 1½ அடி உயரம் உள்ள ஆதீஸ்வரர், 24-வது தீர்த்தங்கரர், சரஸ்வதி, ஜோலமாலினி, சரவண யாக்சன், மற்றும் தலா 1 அடி உயரமுள்ள பஞ்சமேரு, மகாவீரர், தலா ½ அடி உயர தார்நேதயாஸ்கன், பத்மாவதியாசினி, நந்தீஸ்வரர், தலா ¾ அடி உயரமுள்ள நவகிரக தீர்த்தங்கள், நவதேவதை உள்ளிட்ட 22 சிலைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். ஆய்வில் மர்ம நபர்கள் சிலைகளை கொள்ளையடித்து கொண்டு வேனில் சிலைகளை ஏற்றி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

4 பேர் கைது

இதன் அடிப்படையில் போலீசார் தஞ்சை கரந்தை அருகே உள்ள சுங்கான்திடல் பகுதியை சேர்ந்த ராஜே‌‌ஷ்(வயது40) என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கரந்தையை சேர்ந்த சண்முகராஜன்(45), சுங்கான்திடல் பெரிய தெருவை சேர்ந்த ரவி(45), நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள பிரதாபபுரம் பகுதியை சேர்ந்த விஜயகோபால்(37)ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட சாமி சிலைகள் ராஜே‌‌ஷ் வீட்டின் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று 22 சிலைகளையும் மீட்டனர்.


Next Story