கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் பீதி: முட்டை விற்பனையில் நேரடியாக ஈடுபடும் பண்ணையாளர்கள்


கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் பீதி: முட்டை விற்பனையில் நேரடியாக ஈடுபடும் பண்ணையாளர்கள்
x
தினத்தந்தி 9 March 2020 5:00 AM IST (Updated: 9 March 2020 2:56 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் பீதி காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை சரிவடைந்து உள்ளதால் பண்ணையாளர்கள் நேரடி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 5 லட்சம் முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள்ஒன்றுக்கு சுமார் 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கடந்த ஜனவரி மாதம் வரை ஒரு முட்டை 4 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் எழுந்த கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தி காரணமாக முட்டை மற்றும் கோழி விற்பனை சரிவடைய தொடங்கியது.

இதற்கிடையே தற்போது கேரளாவில் 2 பண்ணைகளில் பறவை காய்ச்சல் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் முட்டை விலை வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்து உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு முட்டையின் கொள்முதல் விலையை 308 காசுகள் என நிர்ணயம் செய்தது.

நேரடி விற்பனை

இதுஒருபுறம் இருக்க தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்ணயம் செய்யும் விலைக்கு வியாபாரிகள் பண்ணையாளர்களிடம் முட்டையை வாங்குவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நேற்று ஒரு முட்டையின் விலையை 313 காசுகள் என நிர்ணயம் செய்து இருந்தாலும், வியாபாரிகள் 230 காசுகளுக்கே முட்டையை கேட்பதாக பண்ணையாளர்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் பெரிய பண்ணையாளர்கள் வியாபாரிகளின் நெருக்கடியை தவிர்க்கும் வகையிலும், முட்டைகள் தேங்குவதை தவிர்க்கவும் தங்களின் பண்ணைகளில் உற்பத்தியாகும் முட்டைகளை நேரடியாக விற்பனை செய்ய தொடங்கி உள்ளனர். இவர்கள் 30 முட்டைகள் கொண்ட அட்டை ஒன்றை ரூ.90-க்கு விற்பனை செய்கிறார்கள். உள்ளூர் கடைகளில் ஒரு முட்டை 3 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நேரடியாக பண்ணையாளர்களிடம் வாங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு 70 காசுகள் வரை லாபம் கிடைக்கிறது. எனவே பொதுமக்கள் வாகனங்களில் பண்ணையாளர்களால் விற்பனை செய்யப்படும் முட்டைகளை ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள்.

ந‌‌ஷ்டம்

தமிழகத்தில் உற்பத்தியாகும் முட்டை மற்றும் கோழிகளை விற்பனை செய்யும் முக்கிய விற்பனை மையமாக கேரளா திகழ்ந்து வருகிறது. பறவை காய்ச்சல் பீதியால் அங்கும் முட்டை மற்றும் கோழி விற்பனை பாதிக்கப்படும் சூழ்நிலை உருவானால் என்ன செய்வது என பண்ணையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தற்போது முட்டையின் உற்பத்தி செலவு 4 ரூபாயாக இருந்து வருவதால், தினசரி ஒரு முட்டைக்கு 1 ரூபாய் 70 காசுகள் வரை ந‌‌ஷ்டம் ஏற்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் கூறினர்.

ஏற்கனவே முட்டை உற்பத்தியை குறைக்க பண்ணைகளில் இனிவரும் காலங்களில் 20 சதவீதம் கோழிகுஞ்சுகளை குறைக்க முடிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பெரும்பாலான பண்ணையாளர்கள் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்ணயம் செய்யும் விலைக்கே முட்டைகளை விற்பனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.


Next Story