பேரூராட்சி தேர்தலில் பெண்களுக்கு 60 சதவீத இடஒதுக்கீடு உலக மகளிர் தின விழாவில் தளவாய்சுந்தரம் பேச்சு


பேரூராட்சி தேர்தலில் பெண்களுக்கு 60 சதவீத இடஒதுக்கீடு உலக மகளிர் தின விழாவில் தளவாய்சுந்தரம் பேச்சு
x
தினத்தந்தி 9 March 2020 12:00 AM GMT (Updated: 2020-03-09T04:06:16+05:30)

பேரூராட்சி தேர்தலில் பெண்களுக்கு 60 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது என்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கூறினார்.

நாகர்கோவில்,

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலக மகளிர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் அகஸ்தீஸ்வரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பெர்பச்சுவல் ரொஸிட்டா வரவேற்றார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பங்கேற்று கேக் வெட்டினார். பின்னர் தென்னங்கன்றுகளை வழங்கி அவர் பேசும் போது கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பேரூராட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் பெண்களுக்காக 60 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. பெண் என்பவள் ஒரு பாட்டியாக, அன்னையாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக உருபெருகிறாள். பெண்கள் குடும்ப வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் பல கஷ்டங்களை தாண்டி, முன்னேற்ற பாதையில் வெற்றி நடைபோட்டு வருகிறார்கள்.

பெண்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை வளர்க்கும் போதே நல்ல ஒழுக்கத்தை கற்று கொடுக்க வேண்டும். அவ்வாறு ஒழுக்கத்தை கற்று கொடுத்தால் தான் குழந்தைகளின் வாழ்க்கை சீரோடும், சிறப்போடும் இருக்கும். தாய்மை என்பது பெண்களுக்கு கடவுளால் வழங்கப்பட்ட பெரிய வரமாகும்.

பெண்களுக்கு பெருமை

பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்காக அரசு தொட்டில் குழந்தை திட்டம், இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், சமுதாய வளைகாப்பு, இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மறைந்த ஜெயலலிதா அரசு அறிவித்து செயல்படுத்தி வந்தது. அவர் வழியில் செயல்பட்டு வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பிறந்த நாளை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளார். இது நம் தமிழ்நாட்டு பெண்களுக்கு பெருமை சேர்க்கிறது. மாணவ-மாணவிகள் தேர்வில் தோல்வி அடைந்தால் வாழ்க்கை முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம். இந்த தேர்வில் தோல்வியடைந்தால் அடுத்த தேர்வில் வெற்றி பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் அழகேசன் (அகஸ்தீஸ்வரம்), சாந்தினி (தோவாளை), அய்யப்பன் (ராஜாக்கமங்கலம்) மற்றும் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். முடிவில் நீலா பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story