சைக்கிளில் சென்று சாலை பாதுகாப்பு குறித்து கவர்னர் ஆய்வு


சைக்கிளில் சென்று சாலை பாதுகாப்பு குறித்து கவர்னர் ஆய்வு
x
தினத்தந்தி 8 March 2020 11:42 PM GMT (Updated: 8 March 2020 11:42 PM GMT)

கவர்னர் கிரண்பெடி சைக்கிளில் சென்று சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் ஒவ்வொரு பகுதியாக சென்று களஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவர் செல்லும் இடங்களில் தூய்மைக்கும், நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் 258-வது களஆய்வை கவர்னர் கிரண்பெடி நேற்று மேற்கொண்டார். இதற்காக அவர் கவர்னர் மாளிகையில் இருந்து அதிகாரிகள் குழுவுடன் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

அஜந்தா சந்திப்பு, ராஜா தியேட்டர் சந்திப்பு, சாரம், லெனின் வீதி, நெல்லித்தோப்பு, மறைமலை அடிகள் சாலை, புதிய பஸ்நிலையம், அண்ணாசிலை என புதுவை நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.

போக்குவரத்து நெரிசல்

அப்போது ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. உடனே கவர்னர் கிரண்பெடி இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் ஒரு சில இடங்களில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, அவை சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அதனை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவிட்டார்.

சாலைகளில் தேவைப்படும் இடங்களில் வேகத் தடைகள் அமைத்து, அதன் மீது வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கவும், அதன் அருகில் விளக்குகள் பொருத்தி இரவில் ஒளிரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மரக்கிளைகள் அகற்றம்

கவர்னர் கிரண்பெடி ஆம்பூர் சாலையில் சென்றபோது மாதா கோவில் சந்திப்பு அருகில் நின்ற மரத்தின் கிளைகள் ஒடிந்து சாலையில் சாய்ந்து கிடந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனை பார்த்த கவர்னர் கிரண்பெடி உடனடியாக அதனை அகற்றும் படி பெரியகடை போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் மரக்கிளைகள் வெட்டி அப்புறப் படுத்தப்பட்டது.

இந்த ஆய்வின்போது அரசு செயலாளர்கள் சுர்பிர்சிங், சுந்தரேசன், நகராட்சி ஆணையர்கள் சிவக்குமார், கந்தசாமி மற்றும் கவர்னர் மாளிகை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story