அமராவதி வனப்பகுதியில் காட்டுத்தீ அபாயம்; தீத்தடுப்பு கோடு அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


அமராவதி வனப்பகுதியில் காட்டுத்தீ அபாயம்; தீத்தடுப்பு கோடு அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 March 2020 3:00 AM IST (Updated: 10 March 2020 1:39 AM IST)
t-max-icont-min-icon

அமராவதி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அமராவதி வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தளி, 

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளையே அதிகமாக நம்பி உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள தடுப்பணைகள் மற்றும் வனக்குட்டைகளுக்கு சிற்றாறுகள் மூலமாக நீர் வரத்து ஏற்பட்டது. இதனால் வறட்சியின் பிடியில் இருந்த வனச்சரகங்கள் பசுமைக்கு திரும்பியது. இதன் காரணமாக வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பதில் நீடித்து வந்த சிக்கலுக்கு தற்காலிமாக தீர்வு கிடைத்தது. ஆனாலும் யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதிக்கு வந்து விளைநிலங்களில் புகுந்து சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. அதை தடுப்பதற்காக வனத்துறையினரும் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் மீண்டும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரங்கள், செடிகள் மற்றும் புற்கள் வேகமாக காய்ந்து வருகின்றன. மேலும் வனப்பகுதியில் எளிதில் தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிலவுகிறது. அதை தடுக்கும் விதமாக அடர்ந்த வனப்பகுதி மற்றும் உடுமலை - மூணாறு சாலையின் ஓரங்களில் தீத் தடுப்பு கோடுகளை அமைப்பதென வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக இரண்டு வனச்சரகங்களுக்கும் சேர்ந்து 40 தீத்தடுப்பு காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் வனப்பகுதியில் உள்ள முகாம்களில் தங்கியிருந்து வனப்பகுதியை கண்காணித்து வருகின்றனர். அப்போது தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக சம்மந்தப்பட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். மேலும் உடுமலை-மூணாறு சாலையின் ஒருபுறத்தில் உடுமலை வனப்பகுதியும் மற்றொரு புறத்தில் அமராவதி வனப்பகுதியும் உள்ளது. இந்த சாலை இரண்டு வனப்பகுதிகளுக்கும் எல்லையாக விளங்கி வருகிறது.

இந்த சாலையின் ஓரத்தில் கடந்த 27 -ந் தேதி ஒன்பதாறு சோதனை சாவடியில் இருந்து சின்னாறு சோதனை சாவடிக்கு இடைப்பட்ட பகுதியில் தீத்தடுப்பு கோடுகளை அமைக்கும் பணிகளை உடுமலை மற்றும் அமராவதி வனத்துறையினர் தொடங்கினர். ஆனால் அமராவதி வனப்பகுதிக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைப்பதற்கு தேவையான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமாக உடுமலை- மூணாறு சாலையில் வாகனங்களில் செல்வோர் வீசி எரியும் பீடி மற்றும் சிகரெட் போன்றவைகளால் அமராவதி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதற்கான சூழல் நிலவுகிறது. இதனால் வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து நேரிடும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே உடுமலை- மூணாறு சாலையில் அமராவதி வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் தீத் தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகளை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
1 More update

Next Story