நாமக்கல்லில், நடத்தையில் சந்தேகம்: உருட்டு கட்டையால் தாக்கி 2-வது மனைவி கொலை லாரி டிரைவர் கைது


நாமக்கல்லில், நடத்தையில் சந்தேகம்: உருட்டு கட்டையால் தாக்கி 2-வது மனைவி கொலை லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 10 March 2020 5:30 AM IST (Updated: 10 March 2020 2:33 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நடத்தையில் சந்தேகப்பட்டு உருட்டு கட்டையால் தாக்கி 2-வது மனைவியை கொலை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பெரியப்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் பரமானந்தம் (வயது59). இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து கடந்த 1995-ம் ஆண்டு மயிலாத்தா (45) என்ற பெண்ணை பரமானந்தம் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு காயத்ரி (22) என்ற மகள் உள்ளார். இவர் ஏ.வாழவந்தியை சேர்ந்த கவுதமன் என்பவரை திருமணம் செய்து அங்கு குடியிருந்து வருகிறார். எனவே பரமானந்தம் மற்றும் அவரது மனைவி மயிலாத்தா மட்டும் வீட்டில் வசித்து வந்தனர். அப்போது அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.

உருட்டு கட்டையால் தாக்குதல்

தற்போது கண்பார்வை பிரச்சினையால் டிரைவர் வேலைக்கு செல்லாத பரமானந்தம், நான் வேலைக்கு சென்றபோது கொடுத்த பணம் எங்கே என்று கேட்டு மனைவியிடம் தகராறு செய்து உள்ளார். இதையடுத்து மயிலாத்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். 8-ந் தேதி அவர் மீண்டும் வீட்டுக்கு வந்து உள்ளார்.

அப்போது கடந்த 5 நாட்களாக எங்கே போனாய்? என மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை பரமானந்தம் உருட்டு கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரத்தவெள்ளத்தில் மயிலாத்தா மயங்கி விழுந்து விட்டார்.

லாரி டிரைவர் கைது

இதையடுத்து தனது மகள் காயத்ரிக்கு, பரமானந்தம் செல்போனில் தகவல் தெரிவித்து உள்ளார். அவர் பெரியப்பட்டிக்கு வந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்த மயிலாத்தாளை மீட்டு 108 ஆம்புலன்சில் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் வரும் வழியிலேயே மயிலாத்தா பரிதாபமாக இறந்தார்.

இதைத்தொடர்ந்து மயிலாத்தா உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமானந்தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story