தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா சிறப்பு வார்டு அரசு மருத்துவக்கல்லூரி டீன் தகவல்


தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா சிறப்பு வார்டு அரசு மருத்துவக்கல்லூரி டீன் தகவல்
x
தினத்தந்தி 9 March 2020 11:30 PM GMT (Updated: 2020-03-10T04:15:16+05:30)

கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைபெற வருபவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்படுகிறது என்று அரசு மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி தெரிவித்தார்.

நாகர்கோவில்,

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயால் இந்தியாவில் நேற்று முன்தினம் வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர் அதிகாரிகள் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவக்கல்லூரி டீன்கள் ஆகியோருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதேபோல் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆய்வுக்கூட்டம்

அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வுக்கூட்டத்தில் தெரிவித்த ஆலோசனைகள் தொடர்பாகவும், கொரோனா வைரஸ் குறித்தும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி துறைத்தலைவர்கள், டாக்டர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய டீன் சுகந்தி ராஜகுமாரி பேசும் போது கூறியதாவது:-

கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிறப்பு வார்டு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் 10 படுக்கை வசதி கொண்டு தனி வார்டு ஒன்று தயார் நிலையில் வைக்க கூறப்பட்டுள்ளது. இதேபோல் 2 தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தனி வார்டுகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தக்கலை, குழித்துறை அரசு ஆஸ்பத்திரிகளிலும் தனி வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் கழிப்பறை, குளியலறை வசதிகளுடன்கூடிய 12 தனி அறைகளும் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்காக அமைக்கப்படுகிறது.

தனித்தனி மருத்துவக்குழு

தனிவார்டுகள் அமைக்கப்பட உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி, தனியார் ஆஸ்பத்திரிகள், அரசு ஆஸ்பத்திரிகள் போன்றவற்றில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் இருப்பதைப்போன்று கொரோனா வைரஸ் சிகிச்சைக்குரிய தனித்தனி மருத்துவக்குழுவும் ஏற்படுத்தப்பட உள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் அடிக்கடி கை கழுவ வேண்டும். கை கழுவப் பயன்படும் திரவம் தட்டுப்பாடின்றி கிடைக்க வசதியாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கை கழுவும் திரவத்தை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களுக்கும், பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன. பள்ளி- கல்லூரிகளில் குறும்படங்கள் மூலம் விளக்கவும், காலை வணக்க கூட்டத்தில் விழிப்புணர்வு கருத்துக்களை தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சான்று கொடுக்கக்கூடாது

கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் நீங்கும் வரை அரசு மருத்துவக்கல்லூரியில் பணிபுரியும் டாக்டர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வரவேண்டும். அதிலும் கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்குழுவில் இடம்பெற்றிருக்கும் டாக்டர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது. அப்படியே விடுப்பு எடுக்க நேரிட்டாலும், அவருக்குப் பதிலாக அந்தக்குழுவில் ஒருவரை பணிஅமர்த்திவிட்டுச் செல்ல வேண்டும். வெளிநாடுகளுக்கு செல்ல உடல் தகுதிச்சான்று கேட்டு வருபவர்களுக்கு இந்த வைரஸ் தாக்கம் முடிவுக்கு வரும் வரை சான்று கொடுப்பதை தவிர்க்க வேண்டும். சீனா, ஜப்பான், தென்கொரியா, ஈரான், இத்தாலி போன்ற நாடுகளுக்கு செல்ல உடல் தகுதிச்சான்று கேட்டு வருபவர்களுக்கு சான்று கொடுக்கக்கூடாது.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சளித்தொல்லைக்கு ஒருவர் சிகிச்சை பெற வந்தால், அவரை தனியாக வைத்து முகக்கவசம் அணிவித்து, பாதுகாப்பு உடைகள் அணிந்து அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவரா? அல்லது வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறதா? என்பதைக் கேட்டு அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள், மருத்துவ மாணவ- மாணவிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு டீன் சுகந்தி ராஜகுமாரி கூறினார்.

கூட்டத்தில் உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன், உதவி உறைவிட மருத்துவ அதிகாரிகள் விஜயலெட்சுமி, ரெனிமோள் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story