திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 11 March 2020 10:30 PM GMT (Updated: 2020-03-12T00:34:19+05:30)

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோ‌‌ஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

முன்னதாக உற்சவர் கொடியுடன் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சந்திரசேகரர், தருனேந்துசேகரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் 4 வீதிகளிலும் உலா வந்து தியாகராஜர் கோவிலை அடைந்து, கொடி மரத்துக்கு முன்பு எழுந்தளினர். பின்னர் 32 அடி உயரம் உள்ள புதிய கொடி மரத்துக்கு சந்தனம், பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மாலை அணிவிக்கபட்டது.

கொடியேற்றம்

தொடர்ந்து உற்சவர் கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மேள தாளம் முழங்க பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் உற்சவர் கொடி மரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி வருகிற 23-ந் தேதி(திங்கட்கிழமை) முதல் 26-ந் தேதி வரை சந்திரசேகரர் கேடக உற்சவம், 27-ந் தேதி(வெள்ளிக்கிழமை) வன்மீகநாதருக்கு சகஸ்ரகலசாபிசேகம், 28-ந் தேதி(சனிக்கிழமை) தியாகராஜருக்கு வசந்த உற்சவம், 29-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இந்திர விமானம் உற்சவமும், 30-ந் தேதி (திங்கட்கிழமை) பூதவாகனம் உற்சவமும், 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வெள்ளி யானை வாகன உற்சவமும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி வெள்ளி ரி‌‌ஷப வாகன உற்சவமும், 6-ந் தேதி தியாகராஜருக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது. விழாவில் கோவில் பரம்பரை அறங்காவலர் தியாகராஜன், செயல் அதிகாரி கவிதா மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story