கியாஸ் கசிவால் தீ விபத்து சிகிச்சை பலனின்றி ஒருவர் சாவு


கியாஸ் கசிவால் தீ விபத்து சிகிச்சை பலனின்றி ஒருவர் சாவு
x
தினத்தந்தி 12 March 2020 9:38 PM GMT (Updated: 2020-03-13T03:08:52+05:30)

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், கியாஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செட்டி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 30). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனுமகாலட்சுமி (27). கடந்த 10-ந் தேதி அனுமகாலட்சுமி சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சமையல் அறை முழுவதும் கியாஸ் பரவி இருந்தது. தீப்பிடித்ததில் அனுமகாலட்சுமி மற்றும் அவரது மகள் பிரசித்தா (1) இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு மாரியப்பன் மற்றும் அனுமகாலட்சுமியின் தந்தை தீரவாசகம் (50) ஓடி வந்து அவர்களை காப்பாற்ற முயன்றனர்.

அவர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அனுலட்சுமியின் தந்தை தீரவாசகம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story