புதுச்சேரியில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்? சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்


புதுச்சேரியில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்? சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 13 March 2020 5:01 AM IST (Updated: 13 March 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என கண்டறிய ரத்த மாதிரிகள் புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக் குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

சீனாவில் உகான் நகரில் தொடங்கிய உயிர் கொல்லியான ‘கோவிட்-19’ என்ற கொரோனா வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுவை அரசு சார்பில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி புதுவை விமான நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மருத்துவக்குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்களை தீவிர சோதனைக்கு பின்னரே புதுவைக்கு அனுமதிக்கின்றனர்.

சிறப்பு வார்டு

மேலும் புதுவை கோரிமேட்டில் உள்ள காசநோய் மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை உள்பட அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 23 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் 20 பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை என முடிவு வந்துள்ளன. மீதமுள்ள 3 பேரின் ரத்த மாதிரிகள் புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான முடிவுகள் தெரியவரும். அவர்கள் 3 பேரும் மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story