ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி முனியப்பன்சாமி கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி முனியப்பன்சாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை முனியப்பன்நகரில் பிரசித்தி பெற்ற காவிரி முனியப்பன்சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 11-ந்தேதி காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் நடந்தது. காலை 9 மணிக்கு பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு சென்று காவிரி ஆற்றில் புனிதநீராடி, தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அன்று மாலை 6 மணிக்கு முதல் கால யாக பூஜை தொடங்கியது. அதைத்தொடர்ந்து விக்னேஸ்வர, கும்ப, துவார, சப்தவிம்சதி ஆகிய பூஜைகள்நடந்தது. நேற்று முன்தினம் காலை 8.50 மணிக்கு 2-ம் கால யாக பூஜை நடந்தது. பின்னர் விசேஷ சந்தி, மூர்த்தி ஹோமம் ஆகியன நடக்கிறது. மாலை 6 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும், இரவு 8.30 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று அதிகாலை 4.30 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து மூலமந்திர ஹோமம், கோ பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 6.50 மணிக்கு கோவிலின் கோபுர கலசத்துக்கு சுந்தரேச சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தையொட்டி காவிரி முனியப்பன்சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) முதல் 24 நாட்களுக்கு காலையிலும், மாலையிலும் மண்டல பூஜை நடைபெறுகிறது.
Related Tags :
Next Story