கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு நவீன கருவி மூலம் பரிசோதனை


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு நவீன கருவி மூலம் பரிசோதனை
x
தினத்தந்தி 15 March 2020 4:30 AM IST (Updated: 15 March 2020 12:25 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு நவீன கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த வைரஸ் குறித்து சமயபுரம் கோவிலில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஸ்ரீரங்கம்,

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனா உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்தியாவில் தொடக்கத்தில் இருந்தே கொரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு்ள்ளன. இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவர் உள்பட 2 பேர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருச்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவருக்கும் தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பஸ்கள், ரெயில்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மேற்பார்வையிட்டு வருகின்றனர். மேலும் கோவில்களுக்கு வரும் பக்தர்களையும், சுற்றுலா பயணிகளையும் பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு பரிசோதனை

இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நிர்வாகம் மற்றும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் இணைந்து, கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் அல்ட்ராரெட் டிஜிட்டல் தெர்மா மீட்டர் மூலம் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி குறித்த பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனையை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அரசு மருத்துவமனை டாக்டர் ஸ்ரீதர் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கா, ரெங்கா கோபுரம், கிழக்குவாசல் வெள்ளைகோபுரம், வடக்குவாசல் கோபுரம் ஆகிய 3 நுழைவுவாயில்களிலும் கொரோனா வைரஸ் அறிகுறி குறித்த பரிசோதனை நடைபெறுகிறது. மேலும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கைகழுவும் இடங்களில் கிருமிநாசினி திரவமும், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பாதகைகளும் வைக்கப்பட்டுள்ளது. இருமல், சளி, உள்ளவர்கள் பொது இடங்களுக்கும், கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கும் செல்வதை தவிர்க்கும்படி கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமயபுரம் கோவில்

இதேபோல் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று கண்டறியும் வகையிலும், அதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மேலாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். இதில் இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த 6 டாக்டர்கள் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் பற்றியும், அதில் இருந்து தற்காத்து கொள்வதற்கான முன்னெச்சரிக்கை குறித்தும் எடுத்துக் கூறினர்.

இதைத்தொடர்ந்து கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் முக கவசம் அணிந்து, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக புறப்பட்டு கோவிலின் பின்புறம் வரை வந்தனர். மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிலரை, தற்காலிக மையத்தில் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து இணை ஆணையர் அசோக்குமார் கூறுகையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பக்தர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கோவிலுக்குள் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மையத்தில் இருக்கும் டாக்டர் முதலுதவி சிகிச்சை அளிப்பார். பின்னர் அவர்கள் ச.கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கு கொரோனா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டால் அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள், என்று தெரிவித்தார்.


Next Story